

உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தலை கொண்டுவந்ததே ஸ்டாலின்தான். திமுக இதில் இரட்டை வேடம் போடுகிறது என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியுள்ளார்.
மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்திய ஸ்டாலினே அதனை எதிர்ப்பது விந்தையாக உள்ளது என்றும் அவர் தெரிவித்தார்.
தென்காசி மாவட்டத் தொடக்க விழாவில் பேசிய முதல்வர் பழனிசாமி, "உள்ளாட்சித் தேர்தலில் மறைமுகத் தேர்தலை கொண்டுவந்ததே ஸ்டாலின் தான் .
கடந்த 2006 ஜூன் 31-ல் சட்டப்பேரவையில் பேசிய அப்போதைய உள்ளாட்சித் துறை அமைச்சர் ஸ்டாலின், "அசாம், குஜராத் போன்ற மாநிலத்தில் மறைமுகத் தேர்தல் நடக்கிறது. விழுப்புரம், விருதாச்சலம் 2 நகராட்சிகளில் நேரடித் தேர்தல் நடைபெற்றதால் அந்த அமைப்புகள் செயல்பட முடியாமல் இருந்தது. அதனால்தான் மறைமுகத் தேர்தல் கொண்டுவரப்பட்டது. மேயர் ஒரு கட்சியாகவும், பெரும்பான்மையான கவுன்சிலர்கள் வேறு ஒரு கட்சியாகவும் இருந்தால் அது மக்களுக்கு நன்மையளிக்காது'' எனப் பேசி மறைமுகத் தேர்தலை நியாயப்படுத்தினார்.
அதற்கு முன்னதாக 1996 வரை உள்ளாட்சியில் மறைமுகத் தேர்தல்தான் இருந்தது. நேரடித் தேர்தலைக் கொண்டு வந்ததும் திமுக தான். அதனைத் தொடர்ந்து மறைமுகத் தேர்தலை கொண்டுவந்ததும் திமுக தான். இப்படி ஒரு சூழலில் மறைமுகத் தேர்தல் என ஸ்டாலின் சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் தவறா?
இது மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம் என்ற பழமொழியை நினைவுபடுத்துகிறது. திமுக இரட்டை வேடம் போடுவதை விளக்கிக் கொண்டே செல்லலாம்.
கொள்கை முடிவை எடுப்பதும் அதை மாற்றி அமைப்பதும் மாநில அரசின் முடிவு. இதை முதல்வர் ஜெயலலிதா சட்டப்பேரவையில் விளக்கியிருக்கிறார்.
மறைமுகத் தேர்தலைக் கொண்டு வந்ததற்கு தோல்வி பயம் காரணம் எனவும் திமுகவினர் விமர்சிக்கிறார்கள். அப்படியென்றால் அவர்கள் அன்று அப்படிக் கொண்டுவந்தது சரியா? மறைமுகத் தேர்தலுக்கான சட்டத்தை அமல்படுத்திய ஸ்டாலினே அதனை எதிர்ப்பது விந்தையாக உள்ளது.
ரஜினி சொன்ன அதியம் என்ன தெரியுமா?
2021-ல் ரஜினி எந்த அடிப்படையில் அதிசயம் நிகழும் எனக் கூறினார் எனத் தெரியவில்லை. ஏனெனில், 2021-லும் அதிமுக ஆட்சியே மலரும். ஒருவேளை அவர் இதைத்தான் அதிசயம் எனக் கூறினாரோ. ரஜினி, கமல் குறித்து ஊடகங்கள்தான் பெரிதுபடுத்துகின்றன.