Published : 22 Nov 2019 11:44 AM
Last Updated : 22 Nov 2019 11:46 AM
உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறார்கள். ஆனால், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என்று தென்காசி மாவட்டத் தொடக்க விழாவில் முதல்வர் பழனிசாமி பேசினார்.
தமிழகத்தின் 33-வது மாவட்டமாக தென்காசி உதயமானதைத் தொடர்ந்து, அதன் தொடக்க விழா இன்று முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்றது. நிகழ்ச்சியில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள், நாடாளுமன்ற மற்றும் சட்டப்பேரவை உறுப்பினர்கள், மாவட்ட ஆட்சியர் அருண் சுந்தர் தயாளன் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர். விழாவில் 5000-க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு ரூ.100 கோடிக்கு நலத்திட்ட உதவிகளை தமிழக முதல்வர் வழங்கினார்.
விழாவில் முதல்வர் பேசியதாவது:
''தென்காசி பகுதி மக்கள் தங்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய மாவட்ட தலைநகருக்கு 50 கி.மீ .தூரம் பயணம் செய்ய வேண்டியிருந்தது. இதனால் புதிய மாவட்டமாக உருவாக்கப்பட்டது.
தென்காசி மாவட்டத்தை உருவாக்கியதன் மூலம் தென்காசி மக்களின் 33 ஆண்டுகாலக் கனவை நாங்கள் நிறைவேற்றியுளோம். இந்தப் புதிய மாவட்டத்தில் 8 தாலுகாக்கள், 5 சட்டப்பேரவைத் தொகுதிகள் இடம் பெறுகின்றன. புதிதாக சங்கரன்கோவில் கோட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டதற்கும் உள்ளாட்சித் தேர்தலுக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. உள்ளாட்சித் தேர்தலுக்கு சிலர் முட்டுக்கட்டை போட முயற்சிக்கிறார்கள். ஆனால், விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 453 அறிவிப்புகளில் 368 அரசாணைகள் வழங்கப்பட்டுள்ளன.
நாடே வியக்கும் வகையில் தமிழகத்தில் குடிமராமத்துப் பணிகளை தமிழக அரசு மேற்கொண்டுள்ளது. மின் உற்பத்தியில் தமிழக அரசு சாதனை படைத்துள்ளது. தமிழகத்தில்தான் உயர்கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை இந்தியாவிலேயே அதிகமாக இருக்கிறது.
சிறப்பு குறைதீர் திட்டத்தின் கீழ் ஏழை மக்களிடம் பெறப்பட்ட மனுக்களை எந்த விதத்திலும் நிராகரிக்கக் கூடாது என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ரூ.1 லட்சம் வரை சொத்து உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தென்காசி மாவட்டத்திற்காக ராமநதி - ஜம்பு நதி இணைப்பு திட்டத்துக்கு நிலம் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. செண்பகவல்லி அணை - கன்னியா மதகு பிரச்சினைகளை முடிவுக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
மத்தியில் பாஜகவுடன் கூட்டணி அமைத்த 5 மாதங்களில் தமிழகத்திற்கு 6 மருத்துவக் கல்லூரிகளை அதிமுக அரசு கேட்டுப் பெற்றுள்ளது. இது மிகப்பெரிய சாதனை. நாங்கள் யாருக்கும் அடிமையாக இல்லை. இன்னும் 3 மாவட்டங்களில் மருத்துவக் கல்லூரிகளைக் கொண்டுவர முயற்சித்து வருகிறோம். ஆனால், எதிர்க்கட்சி (திமுக) மத்திய அரசுடன் கூட்டணி வைத்து ஒரு குடும்பத்தைத்தான் வளர்த்தது.
தமிழகத்தில் அரசு நிர்வாகம் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், எதிர்க்கட்சிகள் சில வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் வெற்றிடம் நிலவுவதாக பொய்ப் பிரச்சாரம் செய்துவருகிறது''.
இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார்.