

திருநெல்வேலி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை 8 மணி வரை மாவட்டத்தில் அதிகபட்சமாக கருப்பாநதி அணையில் 35 மி.மீ. மழை பதிவானது.
மற்ற இடங்களில் பதிவான மழை அளவு (மில்லி மீட்டரில்) விவரம்:
தென்காசி- 32, குண்டாறு அணை- 19, ராமநதி அணை- 14, பாபநாசம்- 13, சேர்வலாறு- 10, அம்பாசமுத்திரம்- 8.60, செங்கோட்டை, சிவகிரியில் தலா 8, ராதாபுரம்- 6.20, சங்கரன்கோவில்- 6, மணிமுத்தாறு- 5.20, கடனாநதி அணை- 5, ஆய்க்குடி- 4.80, அடவிநயினார் கோவில் அணை- 3, பாளையங்கோட்டை- 2.40, திருநெல்வேலி- 2, சேரன் மகாதேவி- 1.
4 அணைகள் நிரம்பின
தொடர் மழையால் அணைகள், குளங்கள், கிணறுகளில் நீர்மட்டம் அதி கரித்து வருகிறது. கடனாநதி, கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் கோவில் ஆகிய 4 அணைகள் நிரம்பியுள்ளன. அந்த அணைகளுக்கு வரும் நீர் அப்படியே வெளியேற்றப் படுகிறது.
பாபநாசம், சேர்வலாறு அணைகளுக்கான மொத்த நீர் வரத்து விநாடிக்கு 928 கன அடியாக இருந்தது. 105 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது. பாபநாசம் அணை நீர்மட்டம் ஓரடி உயர்ந்து 133.75 அடியாக இருந்தது.
சேர்வலாறு அணை நீர்மட்டம் 146.64 அடியாகவும், மணிமுத்தாறு அணை நீர்மட்டம் 69.80 அடியாகவும் இருந்தது.
குற்றாலத்தில் அனைத்து அருவிகளிலும் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது. சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குறைவாக இருந்தது