திருப்பூரில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் கெட்டுப்போனதாக குற்றச்சாட்டு

அவிநாசிகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று தண்ணீரில் மிதந்த கெட்டுப்போன முட்டைகள்.
அவிநாசிகவுண்டம்பாளையத்தில் உள்ள ஒரு பள்ளியில் நேற்று தண்ணீரில் மிதந்த கெட்டுப்போன முட்டைகள்.
Updated on
1 min read

அங்கன்வாடிகள் மற்றும் அரசுப் பள்ளிகளில் குழந்தைகளுக்கு வழங்கப்பட இருந்த ஆயிரக்கணக்கான முட்டைகள் கெட்டுப்போனதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அங்கன்வாடி பள்ளி குழந்தைகளுக்காக தமிழக அரசு வாரத்தில் திங்கள், புதன் மற்றும் வியாழன் ஆகிய தினங்களில் முட்டை வழங்கி வருகிறது. அதன் ஒருபகுதியாக திருப்பூரில் கடந்த 15-ம் தேதி முட்டைகள் வந்துள்ளன. அந்த முட்டைகளை 18-ம் தேதி குழந்தைகளுக்கு கொடுப்பதற்காக அங்கன்வாடி ஊழியர்கள் தண்ணீரில் போட்டு சோதனை செய்துள்ளனர். அதில் பல முட்டைகள் தண்ணீரில் மிதந்ததால், அன்றைய தினம் குழந்தைகளுக்கு முட்டை வழங்கப்படவில்லை. வேலம்பாளையம், அனுப்பர் பாளையம், அங்கேரிபாளையம் உட்பட பல்வேறு இடங்களில் முட்டை கெட்டுப்போயிருப்பதாக உயர் அலுவலர்களுக்கு அங்கன்வாடி அலுவலர்கள் தகவல் அளித்தனர். தென்னம்பாளையம் அரசுப் பள்ளி, காட்டுவளவு, பூம்புகார் மையங்களிலும் முட்டை கெட்டுப்போனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனால் கடந்த திங்கள் முதல் மாநகரில் பல பள்ளிகளில் முட்டை வழங்கப்படவில்லை.

அங்கன்வாடி மாவட்ட திட்ட அலுவலர் மரகதம் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘ கடந்த 15-ம் தேதி கொள்முதல் செய்யப்பட்ட முட்டைகள் கெட்டுப்போய் உள்ளன. எவ்வளவு முட்டைகள் கெட்டுப்போனது, எத்தனை மையங்கள் என்பது பற்றி தெரியவில்லை. கெட்டுப்போன முட்டைகளை விநியோகிப்பவர்களே மாற்றித்தருவார்கள்’ என்றார்.

திருப்பூர் அங்கன்வாடி மையங்களுக்கு முட்டை விநியோகிக்கும் பிரவீன் ‘இந்து தமிழ்’ செய்தியாளரிடம் கூறும்போது, ‘புகார் வந்தால், அங்கு சென்று கெட்டுப்போன முட்டைகளை மாற்றித் தருவோம். அங்கேரிபாளையம் பகுதியில் முட்டை கெட்டுப்போனதாக புகார் எழுந்தது. அவற்றை மாற்றித்தந்து கொண்டிருக்கிறோம். திருப்பூர் மாவட்டத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களுக்கு 19,000 முட்டைகள் கொடுக்கிறோம். மாநகரில் 11,000 முட்டைகளை வாரத்துக்கு கொடுக்கிறோம். நாமக்கல் பண்ணைகளில் இருந்து முட்டைகள் வரவழைக்கப்பட்டு வழங்கி வருகிறோம். எத்தனை மையங்கள், எவ்வளவு முட்டைகள் கெட்டுப்போனது என்பது தெரியவில்லை’ என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in