

கோவையில் அமைச்சர் பங்கேற்ற, தமிழக முதல்வரின் சிறப்பு குறைதீர் கூட்டத்தில் பங்கேற்கச் சென்ற திமுக எம்எல்ஏ நா.கார்த்திக்கை காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர்.
கோவை சிங்காநல்லூர் வரதராஜபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியில் சிறப்பு குறைதீர் கூட்டம், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் நேற்று நடைபெற்றது.
சிங்காநல்லூர் தொகுதி சட்டப்பேரவைக்கு உட்பட்ட பகுதியில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, அத்தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக மாநகர் மாவட்டப் பொறுப்பாளருமான நா.கார்த்திக் எம்எல்ஏ-வுக்கு தகவல் தரப்படவில்லையாம். எனினும், அந்த முகாமில் பங்கேற்க நா.கார்த்திக் எம்எல்ஏ சென்றுள்ளார்.
நிகழ்ச்சி நடைபெற்ற இடத்துக்குச் சென்ற எம்.எல்.ஏ. கார்த்திக்கை, காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். முகாமில் பங்கேற்று, பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை கொடுக்கப் போவதாக எம்எல்ஏ தெரிவித்தும், போலீஸார் அவரை அனுமதிக்கவில்லை. இதையடுத்து, அவர்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டது.
இது குறித்து எம்.எல்.ஏ கார்த்திக் கூறும்போது, ‘‘மாவட்ட நிர்வாகம் அரசு விழாக்களுக்கு முறையாக அழைப்பு விடுப்பதில்லை. மாநகராட்சிப் பகுதிகளில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனுக்களை மாநகராட்சி நிர்வாகத்திடம் வழங்கியுள்ளேன். ஆனால், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. குறைதீர் முகாமிலும் மனுக்களை வழங்க, போலீஸார் அனுமதி மறுக்கின்றனர்’’ என்றார்.
பின்னர் அங்கு வந்த மாநகர காவல் துணை ஆணையர் பாலாஜி சரவணன், எம்.எல்.ஏ.வுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் கார்த்திக் எம்எல்ஏ அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.