மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்: அதிமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி

மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல்: அதிமுக கூட்டணி கட்சிகள் அதிர்ச்சி
Updated on
2 min read

மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டிருப்பது அதிமுக கூட்டணி கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

தமிழகத்தில் 3 ஆண்டு தாமதத்துக்குப் பிறகு உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஏற்பாடுகளை மாநில தேர்தல் ஆணையம் செய்து வருகிறது. உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து அதிமுக, திமுக, பாஜக, காங்கிரஸ், தேமுதிகஉள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்று வருகின்றன.

தேர்தலை சந்திக்க அரசியல் கட்சிகள் தயாராகி வரும் நிலையில், மாநகராட்சி மேயர், நகராட்சித் தலைவர், பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தலை ரத்து செய்து, மறைமுகத் தேர்தல் நடத்த தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்துள்ளது. இதற்கு திமுகவும் அதன் கூட்டணி கட்சிகளும் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. அதே நேரத்தில் அதிமுக அரசின் இந்த முடிவு அதன் கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக, தமாகா போன்ற கட்சிகளை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

கடந்த 1996-ல் திமுக ஆட்சிப் பொறுப்பேற்றதும் நீண்டகாலமாக நடத்தப்படாமல் இருந்த உள்ளாட்சித் தேர்தலை நடத்தியது. அப்போது, மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர்களை மக்களே தேர்வு செய்யும் வகையில் நேரடி தேர்தல் நடத்தப்பட்டது. 2001, 2011ஆண்டுகளில் அதிமுக ஆட்சியிலும்இந்தப் பதவிகளுக்கு நேரடி தேர்தலே நடந்தது. இடையில், 2006-ல் திமுக ஆட்சியின்போது மறைமுகத் தேர்தல் கொண்டுவரப்பட்டது.

கடந்த 2016-ல் தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்த ஜெயலலிதா, மேயர் உள்ளிட்ட பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் முறையை கொண்டு வந்தார். இதற்கான சட்ட மசோதா 2016 ஜூன் 23-ம் தேதி சட்டப்பேரவையில் நிறைவேறியது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதல்வரான பழனிசாமி, 2018 ஜனவரி 11-ம் தேதி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு நேரடி தேர்தல் நடத்த சட்ட திருத்தம் கொண்டு வந்தார். ஜெயலலிதாவின் முடிவுக்கு மாறாக நேரடி தேர்தல்முறையை கொண்டு வந்த முதல்வர் பழனிசாமியே, இப்போது மீண்டும் மறைமுகத் தேர்தல் முறையை கொண்டு வந்துள்ளார்.

தமிழகத்தில் 15 மாநகராட்சிகள், 121 நகராட்சிகள், 528 பேரூராட்சிகள் உள்ளன. கூட்டணி கட்சிகளான பாமக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் அதிக மேயர் பதவிகளை கேட்டதால் அதிமுகவுக்கு தர்மசங்கடம் ஏற்பட்டது. பாமக தரப்பில் வேலூர், சேலம், ஆவடி, பாஜக தரப்பில் கோவை, திருப்பூர், நாகர்கோவில், தூத்துக்குடி ஆகியமாநகராட்சிகளின் பட்டியலைக் கொடுத்து தலா 2 மேயர் பதவிகளைக் கேட்டுள்ளன. மதுரையைதேமுதிகவும் தஞ்சாவூரை தமாகாவும் கேட்டுள்ளதாக அதிமுகவினர் தெரிவிக்கின்றனர். பாஜக 2 மேயர் பதவிகளைக் கேட்பதாக அமைச்சர் டி.ஜெயக்குமார் வெளிப்படையாகவே அறிவித்தார். அதுமட்டுமல்லாது அதிக எண்ணிக்கையில் நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளை கூட்டணி கட்சிகள் கேட்டு வருவதாகவும் கூறப்படுகிறது. 2021 சட்டப்பேரவைத் தேர்தலில் கூட்டணி கட்சிகளின் தயவு அவசியம் என்பதால் உள்ளாட்சித் தேர்தல் தொகுதி பங்கீட்டில் கறார் காட்ட முடியாத நிலை அதிமுகவுக்கு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில்தான் மறைமுக தேர்தல் நடத்த அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளிலும் அதிமுகவே அதிக வார்டுகளில் போட்டியிடும். தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு மேயர், நகராட்சி, பேருராட்சித் தலைவர் பதவிகளை தீர்மானிக்கு நிலைக்கு அதிமுக வந்துவிடும். இதனால்தான் பாமக, பாஜக, தேமுதிக போன்ற கட்சிகள் அதிர்ச்சி அடைந்துள்ளன.

இது தொடர்பாக பாஜக மூத்த தலைவர் ஒருவர் கூறும்போது, “2011-ல் தனித்துப் போட்டியிட்டு நாகர்கோவில் உள்ளிட்ட சில நகராட்சித் தலைவர் பதவிகளை பிடித்தோம். நாகர்கோவில் இப்போது மாநகராட்சியாக மாறியுள்ளது. பாஜக தனித்துப் போட்டியிட்டால் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் பதவியை பிடித்திருப்போம். அதைத் தடுக்கவே மறைமுகத் தேர்தல் முறையை அதிமுக கொண்டு வந்துள்ளது. கூட்டணி கட்சி என்பதால் பகிரங்கமாக எதிர்க்க முடியாத நிலையில் இருக்கிறோம். இது தொடர்பாக கட்சி மேலிடத்தில் புகார் தெரிவித்துள்ளோம்’’ என்றார். உள்ளாட்சிகளில் கூட்டணி கட்சிகளுக்கு அதிகாரம் சென்றால் சட்டப்பேரவைத் தேர்தலில் அதிக தொகுதிகளைக் கேட்டு பிடிவாதம் செய்வார்கள். அதைத்தடுக்கவே மறைமுகத் தேர்தல் என்ற அஸ்திரத்தை அதிமுக ஏவியுள்ளதாக கூட்டணிக் கட்சியினர் வேதனை தெரிவிக்கின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in