Last Updated : 22 Nov, 2019 09:21 AM

 

Published : 22 Nov 2019 09:21 AM
Last Updated : 22 Nov 2019 09:21 AM

பள்ளி - கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக்காக மகளிர் சிறப்பு காவல் படை விரைவில் தொடக்கம்

கோப்புப்படம்

சென்னை

பள்ளி, கல்லூரி மாணவிகளின் பாதுகாப்புக்காக சென்னையில் போக்குவரத்து பிரிவு போலீஸார் சார்பில்மகளிர் சிறப்பு காவல் படை உருவாக்கப்பட உள்ளது. அதற்கான பணிகளை போக்குவரத்து பிரிவு போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

கொலை, கொள்ளை, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உட்பட அனைத்து வகையான குற்ற செயல்களையும் குறைக்க சென்னை போலீஸார் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர். குறிப்பாக பெண்களுக்குஎதிரான குற்றங்களை கட்டுப்படுத்த அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ‘தோழி’ என்ற பெயரில் புது திட்டம் சென்னையில் உருவாக்கப்பட்டது. இந்த திட்டத்தில் உள்ளமகளிர் போலீஸார், பாலியல் தொடர்பாக பாதிக்கப்பட்ட பெண்கள் மற்றும் குழந்தைகளுக்குஉதவி செய்து வருகின்றர்.

அதன் தொடர்ச்சியாக தற்போது பெண்களின் பாதுகாப்புக்காக சென்னை போக்குவரத்து பிரிவு போலீஸார் ‘மகளிர் சிறப்பு காவல் படை’ ஒன்றை விரைவில் தொடங்க உள்ளனர். அதற்கான ஆரம்ப கட்டப் பணிகள் தொடங்கியுள்ளன. இதுகுறித்து போக்குவரத்து பிரிவு போலீஸார் கூறும்போது, “புதிதாக உருவாக்கப்பட உள்ளபோக்குவரத்து மகளிர் சிறப்பு காவல் படை பிரிவு போலீஸார், பெண்கள் கல்வி பயிலும் பள்ளி, கல்லூரி மற்றும் தங்கும் விடுதி, பெண்கள் அதிகம் கூடும்இடங்களில் ரோந்து சுற்றி வருவார்கள். மாணவிகள் மற்றும் பெண்களை பின் தொடர்பவர்கள், கேலி,கிண்டல் செய்பவர்கள் உள்ளிட்டோரை அடையாளம் கண்டு அவர்களை சட்டம் ஒழுங்கு போலீஸாரிடம் பிடித்துக் கொடுக்கும் பணியை மேற்கொள்வார்கள்.

பெண்கள் மற்றும் ஆண், பெண் இருபாலரும் சேர்ந்து பயின்று வரும் கல்வி நிலையங்களைச் சுற்றி போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியையும் கவனிப்பார்கள். இதற்காக தற்போது சென்னையில் எத்தனை பெண்கள் பள்ளி, கல்லூரிமற்றும் தங்கும் விடுதிகள் உள்ளன,அவை எங்கு உள்ளன என கணக்கெடுக்கும் பணி தொடங்கியுள்ளது. புதிதாக அமைக்கப்பட உள்ள போக்குவரத்து மகளிர் சிறப்பு காவல் படை பிரிவு போலீஸாரால் பெண்கள் மற்றும் மாணவிகளுக்கு மேலும் அதிக பாதுகாப்பு கிடைக்கும்” என்றனர்.

இதுகுறித்து சென்னை காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் கூறும்போது, “இந்தியாவிலேயே குழந்தைகளுக்கும், பெண்களுக்கும் பாதுகாப்பான நகரமாக சென்னை விளங்குகிறது. அம்மாரோந்து வாகனம் மூலம் கண்காணிக்கும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. பெண்கள் மட்டுமின்றி அனைவருக்கும் 100 சதவீத பாதுகாப்புக்கான உத்தரவாதம் அளிக்கும் வகையில் எங்களது பணி தொடரும்’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x