அரசு ஊழியர் மகளை கடத்திய இளைஞர் செங்குன்றத்தில் சிக்கினார்

அரசு ஊழியர் மகளை கடத்திய இளைஞர் செங்குன்றத்தில் சிக்கினார்
Updated on
1 min read

தந்தையிடம் வாங்கிய கடனை அடைப்பதற்காக அவரது 6 வயது மகளைக் கடத்தி பணம் பறிக்க முயன்ற இளைஞர் கைது செய்யப்பட்டார்.

சென்னை திருவேற்காடு தனம்மாள் தெருவைச் சேர்ந்தவர் பிரபு (35). அரசு ஊழியர். இவரது மனைவி புவனா (30). இவர்களது மகள் ஜீவிதா (6), வீட்டருகே உள்ள பள்ளியில் 2-ம் வகுப்பு படிக்கிறாள். கடந்த 5-ம் தேதி மாலை வீட்டருகே விளையாடிக் கொண்டிருந்த ஜீவிதா திடீரென காணாமல் போனாள். இதுகுறித்து பிரபு கொடுத்த புகாரின் பேரில் திருவேற்காடு போலீஸார் வழக்கு பதிந்து விசாரித்தனர்.

புவனா நடத்தும் பால் நிறுவனத்தில் வேலை பார்க்கும் ஹரி (30) என்பவர் மீது சந்தேகம் ஏற்பட்டது. அவரது வீட்டுக்கு போலீஸார் சென்றபோது, அவர் தலைமறைவாக இருப்பது தெரிந்தது. ஹரிதான் குழந்தையை கடத்தியிருக்கிறார் என்பதை உறுதி செய்த போலீஸார், அவரைப் பிடிக்கும் முயற்சியில் தீவிரமாக இறங்கினர்.

இந்நிலையில், 6-ம் தேதி மாலை புவனாவின் உறவினர் ஒருவர் வீட்டுக்கு போன் செய்த ஹரி, ‘‘ஜீவிதாவை நான்தான் கடத்திச் சென்று ஒரு நண்பரின் வீட்டில் வைத்திருந்தேன். ஜீவிதாவின் தந்தை பிரபுவிடம் நான் வாங்கிய ரூ.1.50 லட்சம் கடனை அவர் திரும்பக் கேட்டு தொந்தரவு செய்ததால் அவரது குழந்தையைக் கடத்தி பணம் பறிக்க நினைத்தேன். ஆனால், போலீஸார் தேடுவதால் குழந்தையை விட்டுச்செல்கிறேன்.

செங்குன்றத்தில் உள்ள ஒரு ஓட்டல் முன்பு குழந்தையை விட்டுச் செல்கிறேன். உடனே வந்து அவளை அழைத்துச் செல்லுங்கள்’ என்று கூறியுள்ளார். இதையடுத்து, ஓட்டல் முன்பு நின்றிருந்த ஜீவிதாவை போலீஸார் மீட்டனர்.

தலைமறைவான ஹரியை தேடிவந்தனர். இந்நிலையில் செங்குன்றத்தில் ஒரு அறையில் ஹரி தலைமறைவாக இருக்கும் தகவல் தெரிந்தது. திங்கள்கிழமை காலை அவரை போலீஸார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் விசாரணை நடந்து வருகிறது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in