

நாட்டிலேயே உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
அனைத்து அரசு மருத்துவக் கல்லூரி முதல்வர்களுடனான ஆய்வுக் கூட்டம் தலைமை செயலகத்தில் நேற்று நடைபெற்றது. சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், மருத்துவக் கல்லூரிகளின் தரம்உயர்த்துவது, புதிதாக அனுமதி பெறப்பட்டுள்ள மருத்துவக் கல்லூரிகளின் பணிகள் தொடங்குவது குறித்து ஆலோசிக்கப்பட்டுள்ளது.
பின்னர், செய்தியாளர்களிடம் அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியதாவது:மருத்துவக் கல்லூரி முதல்வர்கள்சிறப்பாக செயலாற்றுவது மற்றும்நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சைவழங்குவது குறித்து கூட்டத்தில்ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது. மேலும், அரசு மருத்துவமனைகளில் வழங்கப்படும் சலுகைகள் முழுமையாக நோயாளிகளுக்கு செல்கிறதா என்பதை முதல்வர்கள் கண்காணிக்கஅறிவுறுத்தப்பட்டுள்ளது.
தேசிய அளவில், மருத்துவத் துறையில் தமிழகம் சிறந்து விளங்குகிறது. பச்சிளம் குழந்தை, தாய் இறப்புபோன்ற பலவற்றில், தேசிய அளவிலான சுகாதார குறியீட்டில் முன்னோடி மாநிலமாக தமிழகம் உள்ளது. குறிப்பாக, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு,பிரசவ காலத்தின் போது, ஒரு லட்சம் தாய்மார்களில், 66 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது, 63 ஆக குறைக்கப்பட்டுள்ளது.
உடல் உறுப்பு தானத்தில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது. இந்த நிலையை தக்கவைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்காக, கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் உடல் உறுப்பு மாற்று அறுவைசிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது. உடல் உறுப்பு மாற்று சிகிச்சை இல்லாத,மற்ற மருத்துவமனைகளில் தொடங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ராமநாதபுரத்தில், பிரசவத்தின்போது, பெண்ணின் வயிற்றில் ஊசி வைத்து தையல் போட்ட விவகாரத்தில், நர்ஸ் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் தற்போது நலமுடன் இருக்கிறார். இதுபோன்ற தவறுகளை செய்வோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.