

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினரிடம் இருந்து விருப்ப மனுக்களை பெறுவது நேற்று தொடங்கியது.
தமிழகத்தில் விரைவில் நடைபெற உள்ள உள்ளாட்சித் தேர்தலுக்கு அரசியல் கட்சிகள் தயாராகி வருகின்றன. அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகள் விருப்ப மனுக்களை பெற்றுள்ளன.
இந்நிலையில் உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட விரும்பும் காங்கிரஸ் கட்சியினர்நவம்பர் 21, 22, 23 தேதிகளில் அந்தந்த மாவட்ட அலுவலகங்களில் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிவித்திருந்தார். அதன்படி தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி ரீதியாக உள்ள 72 மாவட்டங்களிலும் நேற்று விருப்ப மனு தாக்கல் தொடங்கியது.
மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கு மறைமுகத் தேர்தல் நடத்த அவசர சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதனால் சென்னை மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் பதவிக்கு போட்டியிட மாவட்டத் தலைவர்கள் சிவ.ராஜசேகரன் (சென்னை கிழக்கு), எம்.எஸ்.திரவியம் (சென்னை வடக்கு), வீரபாண்டியன் (சென்னைமேற்கு) ஆகியோரிடம் காங்கிரஸ் கட்சியினர் விருப்ப மனு அளித்தனர். உள்ளாட்சி அமைப்புகளில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதால் அதிக அளவில் பெண்கள் விருப்ப மனு அளித்தனர்.