Last Updated : 22 Nov, 2019 08:13 AM

 

Published : 22 Nov 2019 08:13 AM
Last Updated : 22 Nov 2019 08:13 AM

தண்ணீர் தேங்கியும் புதர் மண்டியும் காணப்படும் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள்; பயனற்று கிடக்கும் காலியிடங்களில் காய்கறி தோட்டம்: அலங்கார செடி, மூலிகை, காய்கறி பயிர் வளர்க்க தமிழக தோட்டக்கலைத் துறை முயற்சி

கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் தண்ணீர் தேங்கியும், புதர் மண்டியும் பயனற்றுக் கிடக்கும் பல்லாயிரக்கணக்கான ஏக்கர் நிலங்களில் காய்கறித் தோட்டம் அமைக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது தோட்டக்கலைத் துறை.

காலியிடங்களின் உரிமையாளர் களுடன் பேச்சுவார்த்தையைத் தொடங்கியுள்ள தோட்டக்கலைத் துறை, பன்னடுக்கு குடியிருப்பு களில் பயன்படுத்தப்படாமல் இருக் கும் இடத்தில் அலங்காரச் செடியுடன், மூலிகைச் செடிகள், காய்கறிப் பயிர்கள் வளர்க்கவும் ஊக்கப்படுத்துகிறது.

சமீப காலங்களில் உணவு, ஊட்டச்சத்து மற்றும் உடல் நலப் பாதுகாப்பில் தோட்டக்கலைத் துறை முக்கியப் பங்கு வகித்து வருகிறது. மாநிலத்தில் மரவள்ளி, வெங்காயம், தக்காளி, கத்தரி, வெண்டை போன்ற முக்கிய காய் கறிப் பயிர்கள் சாகுபடி செய்யப் படுகின்றன. இவை, மொத்த காய்கறிப் பயிர்களின் சாகுபடி பரப்பில் 70 சதவீதம் ஆகும்.

ஒருபுறம், பழங்கள் மற்றும் காய்கறிகள் சாகுபடி செய்வதை ஊக்குவிக்கும் முதல்வரின் சிறப்புத் திட்டத்தின் கீழ், 22,214 ஹெக்டேர் பரப்பளவில் காய்கறிப் பயிர்கள் சாகுபடியையும், 4,082 ஹெக்டேர் பரப்பளவில் பழப் பயிர்கள் சாகுபடியையும் விரிவாக்கம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மறுபுறம், நகர்ப்புற தோட்டப் பயிர்கள் உற்பத்தித் திட்டத்தின்கீழ் காலியிடங்களில் காய்கறித் தோட்டம் அமைப்பதற்கான முயற் சியை தோட்டக்கலைத் துறை முன்னெடுத்துள்ளது.

நகர்ப்புறங்களில்...

இதுகுறித்து தோட்டக்கலைத் துறை அதிகாரி கூறியதாவது:

தமிழகத்தில் குறிப்பாக நகர்ப் புறங்களில் அரை கிரவுண்ட், ஒரு கிரவுண்ட் என ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலங்கள் காலியாகவுள்ளன. இந்த இடங்கள், புதர் மண்டி யும், தண்ணீர் தேங்கியும் பயனற்றுக் கிடக்கின்றன. இவற்றின் உரிமை யாளர்களுக்கு தேவையான உதவி களை வழங்கி, காய்கறித் தோட்டம் அமைத்து காய்கறிகள், பழங்கள் உற்பத்தியை அதிகரிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

சென்னை மற்றும் அதைச் சுற்றியுள்ள புறநகர் பகுதிகளில் காலியாக இருக்கும் அரசு மற்றும் தனியார் இடங்களைக் கண்டறிந்து தெரிவிக்கும்படி, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சிஎம்டிஏ), சென்னை மாநகராட்சி, சென்னை புறநகரில் உள்ள நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளைக் கேட்டுக் கொண் டுள்ளோம். அத்துடன் பிரமாண்ட பன்னடுக்கு குடியிருப்பு வளாகத் தில் உள்ள காலியிடங்கள் பற்றிய தகவல்களை அந்தந்த குடியிருப் போர் நலச் சங்கங்களிடம் சேக ரித்து வருகிறோம்.

விழிப்புணர்வு

குடியிருப்புகளில் வசிப்பவர் களில் பெரும்பாலானோர் அலங் கார செடிகள் வளர்ப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். அலங்காரச் செடி களுடன், மூலிகைச் செடிகள், வீட்டுக்குத் தேவையான தக்காளி, கத்தரிக்காய், வெண்டை உள் ளிட்ட காய்கறிகளை இயற்கை விவசாய முறையில் வளர்த்துப் பயன்பெறுங்கள் என்று அவர்களை அறிவுறுத்துகிறோம்.

அதற்காக, குடியிருப்புகளின் வளாகத்தில் தோட்டக்கலைத் துறை சார்பில் ஸ்டால் அமைத்து, உதவி தோட்டக்கலை அலுவலர் தலைமையில் துறை அலுவலர்கள் காய்கறிச் செடிகள் வளர்ப்பு மற்றும் பயன்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துகிறோம். அண்மையில் விருகம்பாக்கம், தாம்பரம், வண் ணாரப்பேட்டை உள்ளிட்ட இடங் களில் உள்ள பல்வேறு குடியிருப்பு களில் விழிப்புணர்வு ஏற்படுத் தினோம்.

சென்னை விரிவாக்கப் பகுதி களில் காலியாக இருக்கும் இடத் தின் உரிமையாளரைச் சந்தித்து அவரே காய்கறித் தோட்டம் அமைக்க துறை சார்பில் உதவி செய்கிறோம் அல்லது காய்கறித் தோட்டம் அமைக்க முன்வரு வோருக்கு அந்த நிலத்தை குத்த கைக்கு விடும்படி கேட்டுக் கொள் கிறோம். சென்னையில் பூங்காக் கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பய னற்று இருக்கும் காலியிடங்களிலும் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் உள்ளது.

காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில், விளைபொருட் களுக்கு கட்டுப்படியாகும் விலை கிடைக்காமை, தொழிலாளர்கள் பற்றாக்குறையால் சாகுபடி செய்யா மல் நிலத்தை அப்படியே வைத் திருப்பவர்களும் இருக்கிறார்கள். அவர்களை அடையாளம் கண்டு, காய்கறித் தோட்டம் அமைக்க ஊக்கப்படுத்துகிறோம்.

சொட்டு நீர் பாசன கட்டமைப்பை ஏற்படுத்த 75 சதவீத மானியமும், ஆண்டு முழுவதும் காய்கறி சாகுபடி செய்ய வசதியாக அமைக்கப்படும் நிழல்வலைக் கூடத்துக்கு 40 சதவீத மானியமும் வழங்கப்படுகிறது.

இவ்வாறு காலியிடங்களில் காய்கறித் தோட்டம் அமைப்பதால், ஆண்டு முழுவதும் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகள் தட்டுப் பாடின்றி கிடைக்கும்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.சென்னையில் பூங்காக்கள், விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் பயனற்று இருக்கும் காலியிடங்களிலும் காய்கறித் தோட்டம் அமைக்கும் திட்டம் உள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x