Published : 21 Nov 2019 06:26 PM
Last Updated : 21 Nov 2019 06:26 PM

மறைமுகத் தேர்தல் பற்றி ஸ்டாலின் சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம்: முதல்வர் பழனிசாமி பதில்

மறைமுகத் தேர்தல் பற்றி சட்டப்பேரவையில் 2006-ல் ஸ்டாலின் சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம். அவர் சொன்னால் சரி, நாங்கள் சொன்னால் தவறா? என முதல்வர் பழனிசாமி கேள்வி எழுப்பியுள்ளார்.

1996-ம் ஆண்டு முதல் மேயர் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் மக்களால் தேர்தல் மூலம் நேரடியாகத் தேர்வு செய்யப்பட்டனர். பின்னர் அது மாற்றப்பட்டு மறைமுகமாகத் தேர்வு செய்ய சட்டம் கொண்டுவரப்பட்டது. பின்னர் 2011 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்தபோது உள்ளாட்சி அமைப்புகளில் நேரடித் தேர்தல் முறை மீண்டும் கொண்டு வரப்பட்டது.

இடையில் 2016-ல் அம்முறை மாற்றப்பட்டு மறைமுகத் தேர்தல் முறை கொண்டுவரப்பட்டது. 2018-ல் நேரடித் தேர்வு முறை வந்தது, தற்போது மீண்டும் நேரடித் தேர்வு முறை ரத்து செய்யப்பட்டு மறைமுகத் தேர்தல் முறை கொண்டுவரப்படுவதாக அரசாணை நேற்று வெளியிடப்பட்டது.

இதை திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையாக எதிர்த்து வருகின்றன. திமுக தலைவர் ஸ்டாலின் கடுமையாக எதிர்த்து அறிக்கை விட்டார். அவரது அறிக்கையில், “அதிமுக அரசின் அமைச்சரவை, உள்ளாட்சித் தேர்தலை எப்படிச் சந்திப்பது என்பதில் ஒட்டுமொத்தமாகக் குழப்பமடைந்து, இறுதியில், ஒரு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்திருக்கிறது” எனத் தெரிவித்திருந்தார்.

இதுகுறித்து முதல்வர் பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் 2006-ல் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் கொண்டுவந்த தீர்மானத்தைத்தான் நாங்கள் இப்போது கொண்டுவந்துள்ளோம் எனத் தெரிவித்தார்.

செய்தியாளர்களின் கேள்விகளுக்கு முதல்வர் பழனிசாமி பதில் அளித்துப் பேசியதாவது:

ஸ்டாலின் மறைமுகத் தேர்தல் முறையை கடுமையாக எதிர்த்துள்ளாரே?

மறைமுகத் தேர்தல் பற்றி ஸ்டாலின் சொன்னதைத்தான் நாங்கள் சொல்கிறோம். ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சி அமைச்சராக இருந்த ஸ்டாலின் 2006-ல் சட்டப்பேரவையில் மறைமுகத் தேர்தல் முறையை அமல்படுத்தினார். பல மாநிலங்களில் இந்த முறை அமலுக்கு உள்ளது என்பதைச் சுட்டிக்காட்டி மறைமுகத் தேர்தல் முறை வழக்கமான ஒன்றுதான் என்று குறிப்பிட்டார்.

மேலும் பல உதாரணங்களைத் தெரிவித்து தீர்மானத்தை சட்டப்பேரவையில் நிறைவேற்றக் கோரினார். ஸ்டாலினே சொல்லிவிட்டார். ஸ்டாலின் சொன்னால் ஒரு நியாயம் நாங்கள் சொன்னால் ஒரு நியாயமா? ஸ்டாலின் உள்ளாட்சித் துறை அமைச்சராக இருந்தபோது இதேபோல் மாற்றினார். இப்போது எதிர்க்கிறார். எதற்கு அவர்கள் இந்தச் சட்டத்தை எதிர்க்கிறார்கள். அனைத்திலுமே மக்கள்தானே வாக்களிக்கப் போகிறார்கள்.

பாஜகவும் எதிர்க்கிறார்களே ?

பாஜக எதிர்க்கவில்லையே. பொன்.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோரும் ஆதரிக்கத்தான் செய்கிறார்கள்.

ஜெயலலிதா கொண்டு வந்த முறையை மாற்றுவதாகச் சொல்கிறார்களே?

அப்படியெல்லாம் ஒன்றுமில்லை. அவரே தெளிவாக வழிகாட்டியுள்ளார். அந்தந்த காலகட்டத்தை ஒட்டி கொள்கை முடிவை அரசு எடுக்க அதிகாரம் இருக்கிறது என வழிகாட்டியுள்ளார்.

உள்ளாட்சித் தேர்தலை நிறுத்த அரசு சதி செய்வதாகச் சொல்கிறார்களே?

சட்டரீதியாக தடுத்து நிறுத்த முடியாது. உச்ச நீதிமன்றமும் தெளிவாகத் தீர்ப்பு வழங்கிவிட்டது. அரசும் இன்றைக்கு அதற்கு ஒத்துழைப்பை அளிக்கிறது. தேர்தலை அரசு அறிவிக்கப்போவதில்லை. அதற்கென தேர்தல் ஆணையம் உள்ளது. அது தன்னாட்சி பெற்ற அமைப்பு.

அந்த அமைப்பு ஏற்கெனவே உச்ச நீதிமன்றத்தில், தேர்தல் அறிவிக்கப்படும் என அஃபிடவிட் தாக்கல் செய்துள்ளது. ஆகவே தேர்தல் ஆணையம் அறிவிக்கும் என எதிர்பார்க்கிறோம். அப்படி அறிவித்தால் அதிமுக அதை எதிர்கொள்ளும், வெற்றி பெறும்.

இவ்வாறு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x