ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி

ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள்தூளாகும் அதிசயம் நிகழும்: சீமான் பதிலடி
Updated on
1 min read

தான் என்ன பேசினாலும் செய்தியாகும் என்ற ஊடக வெளிச்சத்தில் அரசியல் நடத்தும் ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் தூள் தூளாகும் அதிசயம் 2021-ல் நிகழும் என ரஜினிக்குப் பதிலளிக்கும் விதமாக சீமான் ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

ரஜினி, கமல் இணைவார்கள் எனும் விவாதம் ஊடகங்களால் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது. தேவைப்பட்டால் மக்கள் நலனுக்காக சேர்வோம் என கமலும், அவசியம் ஏற்பட்டால் கமலுடன் கட்டாயம் இணைவேன் என ரஜினியும் மாறி மாறிப் பதிலளித்து வருகின்றனர். மறுபுறம் யார் முதல்வர் என்கிற அளவுக்கு ஆதரவாளர்கள் விவாதம் நடத்த ஆரம்பித்துவிட்டனர்.

திராவிட மண்ணில் ஆன்மிக அரசியலுக்கு இடமில்லை, முதலில் ரஜினி கட்சி ஆரம்பிக்கட்டும் பின்னர் பேசலாம் என அமைச்சர்களும், முதல்வரும் பதிலளித்து வரும் நிலையில் இன்று மீண்டும் பேட்டி அளித்த ரஜினி, "2021-ல் சட்டப்பேரவை தேர்தலில் தமிழக மக்கள் அற்புதத்தை, அதிசயத்தை 100-க்கு 100 சதவீதம் நிகழ்த்துவார்கள்" என்று பதிலளித்தார்.

இதற்கு முதல்வர் பழனிசாமி பதிலளித்தார். இந்நிலையில் ரஜினி கூறிய கருத்துக்கு சீமான் தனது ட்விட்டர் பக்கத்தில் காட்டமாகப் பதிவிட்டுள்ளார்.

அவரது ட்விட்டர் பதிவு:

“ஆம்! அதிசயம் நிகழும். 'தான் என்ன பேசினாலும் அது செய்தியாகும்' என்கிற நினைப்பிலும்,மிதப்பிலும் செய்தி அரசியல் செய்து, அதீத ஊடகவெளிச்சம் மூலம் ஊதிப் பெரிதாக்கப்பட்ட ரஜினிகாந்த் எனும் வெற்றுப் பிம்பம் இனமானத் தமிழர்களால் தூள் தூளாகும் அதிசயம் அற்புதம் 2021-ல் நடக்கும், நடந்தே தீரும்”.

இவ்வாறு சீமான் பதிவிட்டுள்ளார்.

அதற்குக் கீழே ரஜினி ரசிகர்கள் அதுதான் சீமானை வெற்றுப் பிம்பம் என்று விமர்சித்துவிட்டு எதற்காக அவரைப் பற்றி பேச வேண்டும். பயமா? எனக் கேள்வி எழுப்பி விமர்சித்து வருகின்றனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in