

தமிழகத்தின் கடலோர மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக, சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் தெரிவித்துள்ளார்.
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் இன்று (நவ.21) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது:
"அடுத்த 24 மணிநேரத்தைப் பொறுத்தவரை தமிழகம் மற்றும் புதுவையில் கடலோர மாவட்டங்களில் ஒருசில இடங்களில் லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில இடங்களில் மிதமான மழைக்கும் வாய்ப்புள்ளது.
கடந்த 24 மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுவையில் அநேக இடங்களில் மழை பதிவாகியுள்ளது. அதிகபட்ச மழை அளவாக தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் 7 செ.மீ. மழையும், நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் 6 செ.மீ. மழையும், சென்னை மீனம்பாக்கத்தில் 4 செ.மீ. மழையும் பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கான பிரத்யேக எச்சரிக்கை ஏதும் இல்லை".
இவ்வாறு புவியரசன் தெரிவித்தார்.