

தமிழகத்தில் ஆளுமை வெற்றிடம் இல்லை என்று மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.
இந்திய நிதி கூட்டாட்சியிலுள்ள சவால்கள் தொடர்பான தேசியக் கருத்தரங்கு புதுச்சேரியில் இன்று (நவ.21) தொடங்கியது. இக்கருத்தரங்கில் முதல்வர் நாராயணசாமி, கேரள நிதி அமைச்சர் தாமஸ் ஐசக், மக்களவை திமுக உறுப்பினர் கனிமொழி உட்பட பலர் பங்கேற்றனர்.
முன்னதாக, புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசிய கனிமொழி, "திமுகவின் வலியுறுத்தல் காரணமாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கிறது. உள்ளாட்சித் தேர்தல் குழப்பம் இல்லாமல் நேர்மையாக நடைபெற வேண்டும் என்பதுதான் திமுகவின் விருப்பம். ஆனால் அதிமுக நேரடியாக மேயர் தேர்தலை நடத்தினால் வெற்றி பெற முடியாது என்பதால் மறைமுக மேயர் தேர்தலுக்கு அறிவிப்பு செய்துள்ளனர்" எனத் தெரிவித்தார்.
இதையடுத்து, கமல்ஹாசன் - ரஜினி அரசியல் குறித்து செய்தியாளர்களின் கேள்விக்குப் பதிலளித்த கனிமொழி, "நடிகர் கமல்ஹாசன் ஒரு கட்சி ஆரம்பித்தார். மற்றொருவர் இன்னும் கட்சியே ஆரம்பிக்கவில்லை. அவர் கட்சி தொடங்கி அவர்கள் இணைந்த பிறகு அவர்களைப் பற்றிப் பேசலாம். தமிழக அரசியலில் ஆளுமை வெற்றிடம் உருவாகியுள்ளதாக நடிகர் ரஜினிகாந்த் கூறியுள்ளார். திமுகவைப் பொறுத்தவரை மக்களவைத் தேர்தலிலேயே ஆளுமை வெற்றிடம் இல்லை என நிரூபித்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.