Published : 21 Nov 2019 01:18 PM
Last Updated : 21 Nov 2019 01:18 PM

யாரும் பார்க்க வரவில்லை என்ற ஏக்கம்; ஆயுள் தண்டனை பெண் கைதி மனநல மருத்துவமனையில் தற்கொலை 

சித்தரிப்புப் படம்

சென்னை

தன்னை யாரும் பார்க்க வரவில்லை என்கிற ஏக்கத்தில் புலம்பிக் கொண்டிருந்த ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி ஒருவர், மனநல மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கும்போதே தற்கொலை செய்துகொண்டார்.

ஈரோடு மாவட்டம் நல்லகொண்டான் பாளையத்தைச் சேர்ந்தவர் ராஜம்மாள் (65). இவர் 2014-ம் ஆண்டு நடந்த கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று வேலூர் தொரப்பாடி சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். சற்று மனநலம் பாதிக்கப்பட்ட அவர், அயனாவரம் அரசு மனநல மருத்துவமனை கைதிகள் வார்டில் கடந்த 8 மாதங்களாக உள் நோயாளியாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் இன்று அவர் யாருமில்லாத நேரத்தில் மருத்துவமனை அறையில் உள்ள ஜன்னலில் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டார். அவர் தூக்கிட்ட நிலையில் தொங்குவதைப் பார்த்த மருத்துவமனை ஊழியர்கள் அவரை மீட்டுப் பரிசோதித்தபோது அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.

உடனடியாக தலைமைச் செயலக காலனி போலீஸாருக்கு அளிக்கப்பட்ட தகவலை அடுத்து போலீஸார் அங்கு வந்து ராஜம்மாள் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மருத்துவமனை பணியாளர்களிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் சிகிச்சை பெற்றுவந்த ராஜம்மாள் உடல், மனநலம் தேறி வந்த நிலையில் தன்னை உறவுகள் யாரும் பார்க்க வரவில்லையே என அடிக்கடி புலம்பி இருந்ததாகவும், அந்த மன உளைச்சலில் அவர் தற்கொலை செய்திருக்கலாம் என்றும் தெரியவந்துள்ளது.

அரசு மனநல மருத்துவமனையில் ஆயுள் தண்டனை பெற்ற பெண் கைதி தற்கொலை செய்துகொண்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x