

ஓய்.ஆண்டனி செல்வராஜ்
உள்ளாட்சித் தேர்தலில் தென் மாவட்ட அதிமுகவில் மேயர் முதல் கவுன்சிலர் பதவி வரை ‘சீட்’ கேட்டு ஓ.பன்னீர்செல்வத்துக்கு அவரது ஆதரவாளர்கள் நெருக்கடி கொடுத்து வருகின்றனர். அதிமுகவின் ஒருங் கிணைப்பாளராக இருந்தாலும் துணை முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆட்சியிலும், கட்சியிலும் முதல்வர் கே.பழனிசாமி அளவுக்கு செல்வாக்குச் செலுத்த முடியவில்லை.
நடந்து முடிந்த எம்பி தேர்தலில் ஓ.பன்னீர் செல்வம், அவரது மகன் ரவீந்திரநாத்குமாருக்கு மட்டும் தேனி தொகுதியில் ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முடிந்தது. அவரது ஆதரவாளர்களுக்கு எம்பி ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முடியவில்லை.
ஓ.பன்னீர்செல்வம், சசிகலா அணியில் இருந்து பிரிந்து தர்மயுத்தம் தொடங்கியபோது முதன்முதலாக அதிமுகவில் இருந்து வெளியேறி அவரது அணியில் சேர்ந்த அப்போதைய மதுரை எம்பி கோபாலகிருஷ்ணனுக்கு கூட மீண்டும் ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முடிய வில்லை. அப்போது அவரிடம் உள்ளாட்சித் தேர்தலில் மதுரை மேயருக்கு ‘சீட்’ பெற்றுத் தருவதாக ஓ.பன்னீர்செல்வம் உறுதி அளித்ததாகக் கூறப்படுகிறது.
ஆனால், தற்போது மதுரையில் அமைச்சர் செல்லூர் கே.ராஜூ, ஆர்.பி.உதயகுமார், விவி.ராஜன் செல்லப்பா எம்எல்ஏ ஆகியோருக்கு இடையே நடக்கும் பனிப்போரில் மதுரை மேயர் பதவி ஆண்களுக்கு ஒதுக்கப்பட்டாலும் கோபாலகிருஷ்ணனுக்கு ‘சீட்’ கிடைக்க வாய்ப்பு இல்லை என்றே கூறப்படுகிறது.
விருப்பமனு கொடுக்கா விட்டாலும் செல்லூர் கே.ராஜூ, ராஜன் செல்லப்பா குடும்ப உறுப்பினர்களில் ஒருவருக்கு அல்லது அவரது ஆதரவாளர் களுக்கே மேயர் ‘சீட்’ கிடைக்க வாய்ப்புள்ளது. மதுரை மாநகரில் மேயர் ‘சீட்’ கேட்டு, முன்னாள் எம்பி கோபாலகிருஷ்ணன், கிரம்மர் சுரேஷ், சாலைமுத்து, திரவியம், பொருளாளர் ராஜா, சோலைராஜா, சண்முகவள்ளி, கண்ணகி பாஸ்கரன் உள்ளிட்ட பலர் விருப்பமனு கொடுத்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள அனைத்து மாநகராட்சி மேயர், கவுன்சிலர் மற்றும் நகராட்சி, பேரூராட்சித் தலைவர் பதவிகளுக்கும் ஓபிஎஸ்-இபிஎஸ் ஆகிய இரு தரப்பு ஆதரவாளர்களும் விருப்ப மனு கொடுத்துள்ளனர்.
கடந்த எம்பி தேர்தலில் ஆதரவாளர்களைத் திருப்திப் படுத்த முடியவில்லை என்றும், உள்ளாட்சித் தேர்தலில் தனது ஆதரவாளர்களுக்கு ஓரளவு ‘சீட்’ பெற்றுக் கொடுக்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் முடிவு செய்து, அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
ஆனால், அதற்கு உள்ளூர் அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள் முட்டுக்கட்டை போட்டு வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் முதல்வர் கே.பழனிசாமி ஆதரவாளர்களாக இருப்பதால் ஓ.பன்னீர்செல்வம் ஆதரவா ளர்களுக்கு ‘சீட்’ கிடைப்பது குதிரைக்கொம் பாகத்தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
ஆனால், ஓ.பன்னீர் செல்வம் ஆதரவாளர்கள், ‘சீட்’ பெற்றுத் தர இப்போதிருந்தே பெரும் நெருக்கடி கொடுக்கத் தொடங்கி உள்ளனர். வெளிநாடு சுற்றுப்பயணம் முடிந்து திரும்பியுள்ள ஓ.பன்னீர் செல்வம், உள்ளாட்சித்தேர்தல் பணியில் கவனம் செலுத்தத் தொடங்கி உள்ளார்.
தேனி மாவட்டத்தில் மட்டும் ஓ.பன்னீர்செல்வம் நினைத்தது போல் ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுக்க முடியும் என்றும் மற்ற மாவட்டங்களில் அமைச்சர்களின் முட்டுக் கட்டையால் ஆதரவாளர்களுக்கு ‘சீட்’ பெற்றுக் கொடுப்பதில் அவர் பெரும் போராட்டத்தையும், சிரமத்தையும் சந்திக்க நேரிடும் என்றும் கூறப்படுகிறது.