Published : 21 Nov 2019 11:51 AM
Last Updated : 21 Nov 2019 11:51 AM

ஆதரவற்றோர் காப்பக மூதாட்டிகளின் அரிய சேவை

மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு சிற்றுண்டி வழங்கும் ஆதரவற்றோர் காப்பக மூதாட்டிகள்.

கோவை

டி.ஜி.ரகுபதி

கோவை மாநகராட்சி காப்பகத்தை சேர்ந்த மூதாட்டிகள், பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு, மாலை சிற்றுண்டி தயாரித்து வழங்கிவருகின்றனர்.

கோவை ஆர்.எஸ்.புரம் ஆரோக்கியசாமி சாலையில், மாநகராட்சி கட்டுப்பாட்டின் கீழ், இரண்டு ஆதரவற்றோர் காப்பகங்கள் உள்ளன. சமூக அக்கறை அடிப்படையில், தேர்வுசெய்யப்பட்ட தன்னார்வ அமைப்பினர் மூலமாக இக்காப்பகங்கள் பராமரிக்கப்படுகின்றன.

மாநகரில் சாலைகளில் சுற்றும் ஆதரவற்றவர்கள் காவல்துறையினர், சமூகஆர்வலர்களால் மீட்கப்பட்டு இங்கு தங்க வைக்கப்படுகின்றனர். முதலாவது ஆதரவற்றோர் காப்பகத்தில் ஏறத்தாழ 100 பேரும், இரண்டாவது காப்பகத்தில் 75 பேரும் உள்ளனர்.

நன்கொடை மூலம் கிடைக்கும் நிதியை பயன்படுத்தி, இங்குள்ளவர்களுக்கு உணவு தயாரித்து வழங்கியும், அடிப்படை தேவைகளும் நிறைவேற்றப்படுகின்றன. இரண்டாவது ஆதரவற்றோர் காப்பகத்தின் மூலம், அருகில் உள்ள மாநகராட்சிப் பள்ளி மாணவ, மாணவிகளுக்கு காலை, மாலை நேரங்களில் உணவு, சிற்றுண்டி தயாரித்து வழங்கப்படுகிறது. காப்பகத்தின் பராமரிப்பாளர்மகேந்திரன் கூறும்போது,‘‘இக்காப்பகத்தில் 69 மூதாட்டிகள் உட்பட 75 பேர் உள்ளனர்.

இதன் அருகே உள்ள மாநகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு காலை நேரங்களில், குடும்ப சூழல் காரணமாக குறிப்பிட்ட எண்ணிக்கையிலான மாணவ, மாணவிகள் சாப்பிடாமல் வருவதாகவும், பிரேயர் கூட்டங்களிலேயே சிலர் பசியால் மயங்கி விழுவதாகவும் எங்களுக்கு தெரியவந்தது. இதுகுறித்து காப்பக மூதாட்டிகளிடம் தெரிவித்தேன். அவர்கள் தினசரி தங்களுக்கு உணவு சமைப்பது போல், 100 மாணவர்களுக்கும் சேர்த்து காலை உணவு தயாரித்து வழங்குவோம் எனத்தெரிவித்தனர்.

இதை தொடர்ந்து, கடந்த 3 ஆண்டுகளாக காலை நேரத்தில் பள்ளி மாணவர்களுக்கு மூதாட்டிகள் உணவு தயாரித்துமாணவர்களுக்கு வழங்குகின்றனர். தேவைப்படுபவர்கள் வந்து சாப்பிட்டுச் செல்கின்றனர். இதை தொடர்ந்து, நேற்று முன்தினம் முதல் மாலை நேரத்திலும் சிற்றுண்டி தயாரித்து வழங்கி வருகிறோம். மாலை 5.30 மணி வரை சிறப்பு வகுப்புகள் நடப்பதால், மாணவ, மாணவிகளுக்கு பசி ஏற்படக் கூடாது என்பதற்காக சிற்றுண்டி தயாரித்து வழங்கப்படுகிறது.

காலை டிபனுக்கு இட்லி, தோசை, பொங்கல், உப்புமா போன்றவையும், மாலை சிற்றுண்டிக்கு தேநீர், காபி, சுண்டல், பயறு வகைகள், தானிய வகைகளும் தயாரித்து வழங்குகிறோம். காலை டிபன், மாலை சிற்றுண்டிக்காக ஒருநாளைக்கு ஏறத்தாழ ரூ.2,500 செலவாகிறது. நாங்களே சமைப்பதால், சமையல் கூலி செலவு இல்லை. எங்களுக்கு கிடைக்கும் நன்கொடை நிதியை பயன்படுத்தி தயாரித்து வழங்குகிறோம்,’’ என்றார்.

சிறப்பு இடைவேளைசம்பந்தப்பட்ட மாநகராட்சிப் பள்ளியின் வேதியியல் பிரிவுமுதுகலை பட்டதாரி ஆசிரியரும்,இதற்கான ஒருங்கிணைப்பாளருமான கார்த்திக் கூறும்போது,‘‘இப்பள்ளியில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை 30 மாணவிகள் உட்பட 320 பேர் படிக்கின்றனர்.

காலை 9.15 முதல் 9.30 மணி வரையும், மாலை 4.15 முதல் 4.20 வரையும் சிறப்பு இடைவேளை விடுகிறோம். இந்த நேரத்தில் காப்பகத்தில் தயாரித்து வழங்கும் டிபன், சிற்றுண்டியை சாப்பிட்டு மாணவ, மாணவிகள் பசியை போக்கிக் கொள்கின்றனர்’’ என்றனர்.

காப்பகத்தில் உள்ள மூதாட்டி சகுந்தலா(70) கூறும்போது,‘‘ எனது கணவர் இறந்துவிட்டார். ஒரு மகன் உள்ளார். பி.என்.புதூர் அருகே வசித்து வந்தேன். மகன் என்னை ஒதுக்கிவிட்டதால், 3 ஆண்டுகளாக இக்காப்பகத்தில் தங்கியுள்ளேன். பள்ளி மாணவ, மாணவிகளுக்கு உணவு தயாரித்து வழங்குவது என் பேரன், பேத்திகளுக்கு வழங்குவது போல் நெகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது’’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x