Published : 21 Nov 2019 11:48 AM
Last Updated : 21 Nov 2019 11:48 AM

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் பணிகள் முடிந்து 4 மாதங்களாகியும் பயன்பாட்டுக்கு வராத எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் மின் இணைப்பு பெறுவதில் உள்ள சிக்கலால் தாமதம்

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டு 4 மாதங்கள் ஆகியும் இன்னும் பயன் பாட்டுக்கு வராதால் பொதுமக்கள் அவதியடைந்துள்ளனர்.

அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் மட்டுமே இருந்த எம்ஆர்ஐ ஸ்கேன் வசதி, தமிழகத்தில் முதலாவதாக பெரம்பலூரில் மாவட்ட தலைமை மருத்துவமனையில் ரூ.6 கோடி மதிப்பில் அமைக்கப்பட்டது. இந்த ஸ்கேன் வசதி மூலம் விபத்துகளில் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் இதர நோய்களின் தீவிர பாதிப்புகளை துல்லியமாக அறிந்து மிகச் சரியான சிகிச்சை பெற முடியும் என்பதால் இம்மாவட்ட மக்கள் மகிழ்ச்சியடைந்தனர். ஆனால், ஸ்கேன் மையம் அமைக்கப்பட்டு 4 மாதங்களாகியும் இன்னும் பயன் பாட்டுக்கு வராததால் இப்பகுதி மக்கள் கவலையடைந்துள்ளனர்.

இதுகுறித்து ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவி கலையரசி, அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க மாவட்ட செயலாளர் ரமேஷ் ஆகியோர் கூறியதாவது:

பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஸ்கேன் மையம் அமைக்கும் பணிகள் நிறைவடைந்து 4 மாதங்கள் ஆகியும், சுகாதாரத்துறை மற்றும் மின் வாரிய அதிகாரிகளின் மெத்தன போக்கால், இம்மையத்துக்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் இன்னும் செயல்பாட்டுக்கு வராமல் உள்ளது. இதனால், சாமானிய மக்கள் உரிய சிகிச்சை கிடைக்காமல் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியரின் கவனத்துக்கு எடுத்துச் சென்றும் தீர்வு கிடைக்கவில்லை. எனவே, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு விரைவில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்தை பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை எனில் போராட்டம் நடத்துவோம் என்றனர்.

இதுகுறித்து மின்வாரிய செயற்பொறியாளர் பிரகாசம் கூறியதாவது: பெரம்பலூர் அரசு மருத்துவமனையில் ஏற்கெனவே ஒரு குறைந்த அழுத்த மின் இணைப்பு உள்ளது. இந்நிலையில் எம்ஆர்ஐ ஸ்கேன் மையத்துக்காக உயர் அழுத்த மின் இணைப்பு வழங்கும்படி கேட்டுள்ளனர். மின் வாரிய விதி முறைகளின்படி ஒரே வளாகத்தில் குறைந்த அழுத்த மின் இணைப்பும், உயர் அழுத்த மின் இணைப்பும் வழங்க முடியாது.

ஏனெனில் இரண்டுக்கும் கட்டண விகிதம் வேறு. உயர் மின் அழுத்த இணைப்புகளில் விதிமீறலை கண்காணிக்க 8 விதமான பிரிவுகள் மின்வாரியத்தில் உள்ளன. விதிமுறைகளை மீறி மின் இணைப்பு வழங்கப்பட்டது கண்டறியப்பட்டால் தண்டனைக் குள்ளாவது நாங்கள்தான்.

அதனால், மருத்துவமனை வளாகத்தில் உள்ள குறைந்த அழுத்த மின் இணைப்பை துண்டித்துவிட்டு அதிக திறன் கொண்ட ஒரே உயர் அழுத்த மின் இணைப்பு பெற்றுக்கொள்ளுங்கள் அல்லது இந்த மையத்தை சுற்றிலும் சுற்றுச்சுவர் கட்டி தனி வளாகம் கொண்டதாக மாற்றி அமையுங்கள் என மருத்துவமனை நிர்வாகத்தை அறிவுறுத்தியுள்ளோம் என்றார்.

இதுகுறித்து மருத்துவமனை கண்காணிப்பாளர் தர்மலிங்கம் கூறியதாவது: சுற்றுச் சுவர் கட்டினால் ஆம்புலன்ஸ் வந்துபோக இயலாது. மேலும், குறைந்த அழுத்த மின் இணைப்பை துண்டித்தால் பல்வேறு மருத்துவ உபகரணங்களை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படும். இந்த பிரச்சினைக்கு மாவட்ட ஆட்சியர் தலையிட்டு தீர்வு காண்பார் என காத்திருக்கிறோம் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x