தரை மேல் பிறந்தாலும் உயிரைப் பணயம் வைத்து தொழில் செய்பவர்கள்; உலக மீனவர் தினம்: கே.எஸ்.அழகிரி வாழ்த்து

கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
கே.எஸ்.அழகிரி: கோப்புப்படம்
Updated on
1 min read

மீனவ சமுதாயத்தினரின் நலனில் அனைவரும் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பு வழங்க வேண்டும் என, தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக கே.எஸ்.அழகிரி இன்று (நவ.21) வெளியிட்ட அறிக்கையில், "இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஒரு சதவீத பங்களிப்பும், விவசாயம் மற்றும் அதன் தொடர்புடைய துறையில் 5 சதவீதத்திற்கும் கூடுதலான பங்கும் வழங்கி வருகிற மீனவர்களுக்கு உலக மீனவர் தினத்தையொட்டி தமிழ்நாடு காங்கிரஸ் சார்பாக மனப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

இந்தியாவின் பொருளாதாரத்தை உயர்த்துவதில் கணிசமான பங்கை மீனவர் சமுதாயம் ஆற்றி வருகிறது. இந்தியாவில் மொத்தமுள்ள 8,000 கிலோ மீட்டர் கடற்கரை தூரத்தில் ஏறத்தாழ 1,000 கிலோ மீட்டர் தூரத்தை தமிழகம் பெற்றிருக்கிறது. ஏறத்தாழ 10 லட்சம் மீனவர்கள் தமிழகத்தில் மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால் அவர்களது வாழ்வாதாரம் என்பது இயற்கைச் சீற்றம் உள்ளிட்ட காரணங்களால் பல்வேறு சோதனைகளுக்கு உள்ளாகி வருகிறது. இவர்களுக்கு முழுமையான சமூக பாதுகாப்பு வழங்க வேண்டிய பொறுப்பு மத்திய, மாநில அரசுகளுக்கு இருக்கிறது.

ஒவ்வொரு தொழிலுக்கும் ஒரு குணாதிசயம் உண்டு. ஆனால், மீனவர் சமுதாயத்தைப் பொறுத்தவரை தரை மேல் பிறந்தாலும் உயிரைப் பணயம் வைத்து, கடலில் மிதந்து தொழில் நடத்தவேண்டிய அசாதாரணமான சூழல் இருக்கிறது. எனவே, இந்தப் பின்னணியில் அனைத்துப் பிரிவினரையும் விட மீனவ சமுதாயத்தினரின் நலனில் அனைவரும் முழு அக்கறை செலுத்தி பாதுகாப்பு வழங்க உலக மீனவர் தினத்தில் உறுதி மேற்கொள்ள வேண்டும்" என கே.எஸ்.அழகிரி வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in