

பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நேற்று பதவியேற்றுக் கொண்டார்.
தமிழக பள்ளிக் கல்வியில் துறை இயக்குநர்களை கண்காணிக்க புதிதாக ஆணையர் பதவி உருவாக்கப்பட்டு, அந்த இடத்துக்கு ஐஏஎஸ் அதிகாரி சிஜி தாமஸ் வைத்யன் நியமிக்கப்பட்டார்.
தொடர்ந்து பள்ளிக்கல்வித் துறையின் புதிய ஆணையராக சிஜி தாமஸ் வைத்யன் நேற்று காலை பதவியேற்று கொண்டார். அவருக்கு கல்வித்துறை இயக்குநர்கள், அதிகாரிகள், ஆசிரிய சங்கநிர்வாகிகள் வாழ்த்துத் தெரிவித்தனர்.
இதற்கிடையே சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ வளாகத்தில் பள்ளிக்கல்வியின் புதிய அலுவலக கட்டிடப் பணிகள் நடைபெற்று வருகின்றன. புதிய கட்டிடத்தில்தான் ஆணையருக்கு பிரத்யேக அலுவலகம் ஒதுக்கப்பட உள்ளது.
அதுவரை பள்ளிக்கல்வி இயக்குநர் அலுவலகம் அருகே ஆணையருக்கு தற்காலிக அறை ஒதுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பள்ளிக்கல்வியின்கீழ் உள்ள 10 இயக்குநரகங்களையும் மேற்பார்வையிடுதல், திட்டங்களுக்கு நிதி பெற்று தருதல் உட்பட பணிகளை ஆணையர் மேற்கொள்வார் என்று துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
பணி வரம்புகள் வெளியீடுபுதிய ஆணையருக்கான பணிவரம்புகள் குறித்த அரசாணையை பள்ளிக்கல்வி முதன்மை செயலாளர் பிரதீப் யாதவ் நேற்று வெளியிட்டார். அதில், ‘‘பள்ளிகளின் கற்பித்தல் செயல்பாட்டை மேம்படுத்தவும், பள்ளிக்கல்வியில் நடைமுறையில் உள்ள திட்டங்கள் மற்றும் அறிமுகப்படுத்தப்படும் புதிய திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுகிறதா என்பதை கண்காணிக்கவும் ஆணையர் பதவி உருவாக்கப்பட்டுள்ளது. புதிய ஆணையரான சிஜி தாமஸ் வைத்யன் பள்ளிக்கல்வியின் தரத்தை மேம்படுத்தும் வகையில் செயல்படுவார்.
பள்ளிக்கல்வி, தொடக்கக்கல்வி, மெட்ரிக் பள்ளிகள், தேர்வுத்துறை ஆகிய 4 இயக்குநரகங்களை ஒருங்கிணைத்து சீரான நிர்வாகத்தை ஆணையர் வழங்குவார். பள்ளிகளுக்கு நேரடியாக சென்று ஆய்வு செய்வதுடன், துறை சார்ந்த வழக்குகள் இனி ஆணையர் மூலமாகவே மேற்கொள்ளப்படும்’’ என்று கூறப்பட்டுள்ளது.