Published : 21 Nov 2019 09:34 AM
Last Updated : 21 Nov 2019 09:34 AM

குடிநீர் இணைப்புகளை கண்காணிப்பது உள்ளிட்டவற்றை விளக்கும் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு கையேடு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்டது

கோப்புப்படம்

சென்னை

தமிழகத்தில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்கவும் அனுமதி பெறாதகுடிநீர் இணைப்புகளை கண்காணிக்கவும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் பராமரிப்பு கையேடு வெளியிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம், தமிழகம் முழுவதும் 556 கூட்டுக் குடிநீர் திட்டங்கள் மூலம் சென்னைதவிர 9 மாநகராட்சிகள், 66 நகராட்சிகள், 347 பேரூராட்சிகள் மற்றும் 48,948 ஊரகக் குடியிருப்புகளின் மூலம் 4 கோடியே 23 லட்சம் மக்களுக்கு வடிவமைக்கப்பட்ட அளவான 2,146 மில்லியன் லிட்டர் பாதுகாக்கப்பட்ட குடிநீர் விநியோகிக்கப்பட்டது.

இக்கூட்டுக் குடிநீர் திட்டங்களை பராமரிக்கும் வகையில், தமிழக வரலாற்றில் முதன்முறையாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் கூட்டுக்குடிநீர் திட்ட பராமரிப்பு கையேட்டை தயாரித்து வெளியிட்டுள்ளது. இக்கையேட்டில் கூட்டுக் குடிநீர் திட்டங்களை சிறந்த முறையில் பராமரிக்க வாரியத்தில் உள்ள தலைமைப் பொறியாளர் முதல் இளநிலை உதவிப் பொறியாளர் வரை அவரவர் பொறுப்புகள், மேற்கொள்ள வேண்டிய பணிகள், ஒப்பந்ததாரர்கள் மற்றும் பராமரிப்பு பணியாட்களின் பணிகள் போன்றவை குறித்து விரிவாக கூறப்பட்டுள்ளன.

மேலும், இக்கையேட்டில் கூட்டுக் குடிநீர் திட்ட பராமரிப்பு ஒப்பந்தப்புள்ளி மற்றும் பராமரிப்பு ஒப்பந்த மாதிரி, சட்ட விரோத குடிநீர் இணைப்பு சம்பந்தமான புகார்கள், நடவடிக்கைகள், அனுமதி பெறப்படாத முறையற்ற குடிநீர் இணைப்புகளை நீக்கும் வழிமுறைகள், கூட்டுக் குடிநீர் திட்டத்தில் ஏற்படும் குழாய் உடைப்பு, கசிவு சரிசெய்தல் போன்றவை இடம் பெற்றுள்ளன.

மின் மோட்டார் மற்றும் இயந்திரங்கள் பராமரிப்பு மற்றும் பழுதுநீக்கம் பற்றிய வாரிய விதிமுறைகள், நீர் சுத்திகரிப்பில் பயன்படுத்தப்படும் குளோரின் வகைகள், கிருமி நாசினி கலத்தல், தரைமட்ட தொட்டி மற்றும் இதர சேகரிப்பு தொட்டிகள் சுத்தம் செய்தல் போன்ற பணிகளைப் பற்றிய விவரங்கள், கூட்டுக் குடிநீர் திட்டங்களில் குடிநீர் வீணாவதை குறைப்பதற்கான வழிமுறைகள், பணியாளர் நலன், டெங்கு ஒழிப்பு சம்பந்தமான பணிகள், மழை மற்றும் வறட்சி காலங்களில் மேற்கொள்ளப்பட வேண்டிய பேரிடர் முன்னேற்பாடு நடவடிக்கைகள் ஆகியவை குறித்து விரிவாக எடுத்துரைக்கப்பட்டுள்ளன.

இந்த கையேட்டை தலைமைச் செயலகத்தில் நகராட்சி நிர்வாகத் துறை செயலர் ஹர்மந்தர் சிங் வெளியிட, வாரிய களப்பொறியாளர்கள் சார்பில் உதவி நிர்வாக பொறியாளர்அமலதீபன் பெற்றுக் கொண்டார். நிகழ்வில், தமிழ்நாடு குடிநீர் வாரிய மேலாண் இயக்குநர் சி.என்.மகேஸ்வரன் பங்கேற்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x