Published : 21 Nov 2019 09:09 AM
Last Updated : 21 Nov 2019 09:09 AM

தாம்பரத்தில் கூடுதலாக எஸ்கலேட்டர்; ரயில்வே நிதி தராவிட்டால் தொகுதி நிதியை தருவேன்: டி.ஆர்.பாலு எம்.பி. உறுதி

தாம்பரம் ரயில் நிலையத்தில் கூடுதலாக நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) அமைக்க ரயில்வே வாரியம் நிதி தராவிட்டால், தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து வழங்க தயாராக இருப்பதாக திமுக எம்.பி. டி.ஆர்.பாலு உறுதியளித்துள்ளார்.

இதுதொடர்பாக ரயில்வேவாரிய தலைவர் வினோத்குமாருக்கு டி.ஆர்.பாலு அனுப்பியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தென்மாவட்டங்களில் இருந்து வரும் அனைத்து ரயில்களும் சென்னை தாம்பரம் ரயில் நிலையத்தில் நின்று செல்கின்றன. 60 சதவீதத்துக்கும் மேலான பயணிகள் தாம்பரத்தில் இறங்கி, புறநகர் பகுதிகளுக்கு பயணம் செய்கிறார்கள். மாணவர்கள், மூத்த குடிமக்கள், உடல்நலம் குன்றியோர் 5, 6, 7 மற்றும் 8-வதுநடைமேடைகளைப் பயன்படுத்துவதில் சிரமப்படுகின்றனர்.

எனவே, தாம்பரம் ரயில் நிலையத்தில் நடைமேடை 5 மற்றும் 6-க்குப் பொதுவாக மின்தூக்கி நகரும் படிக்கட்டுகள் (எஸ்கலேட்டர்) ஒன்றும், நடைமேடை 7, 8-க்குப் பொதுவாகமற்றொரு நகரும் படிக்கட்டுகள்அமைத்து தர ரயில்வே அதிகாரிகளுக்கு ஆணையிட வேண்டும்.

இதனால், பயணிகள் மிகுந்த பயன்பெறுவார்கள். ரயில்வே துறை இத்திட்டத்துக்கான நிதி உதவியை உடனடியாக ஒதுக்கீடு செய்யாவிட்டால் இதற்கான உத்தேச செலவை ரயில்வே நிர்வாகம் தெரிவித்தவுடன் பயணிகளின் வசதிக்காக எனது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து முழு தொகையையும் வழங்கத் தயாராக உள்ளேன். இவ்வாறு கடிதத்தில் டி.ஆர்.பாலு கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x