Published : 21 Nov 2019 08:33 AM
Last Updated : 21 Nov 2019 08:33 AM

இன்று உலக மீனவர் தினம் - தமிழகத்தில் ஆண்டுக்கு 35 மீனவர் ஆழ்கடலில் உயிரிழப்பு: பாதுகாப்பின்மையால் மாற்றுத்தொழிலை நாடும் இளைஞர்கள்

எல்.மோகன்

தமிழகத்தில் ஆண்டுதோறும் 35-க்கும் மேற்பட்ட மீனவர்கள் ஆழ்கடலில் மீன்பிடி பணியின்போது உயிரிழக்கும் சோகம் நிகழ்ந்து வருகிறது.

நவ.21-ம் தேதியான இன்று உலக மீன்வள தினமாகும். இதையே மீனவர் தினமாகவும் கடைபிடிக்கின்றனர். ஊட்டச்சத்து மிக்க மீன்களை கிடைக்கச் செய்வதிலும், அந்நியச் செலாவணியை ஈட்டித் தருவதிலும் மீன்பிடி தொழில் முக்கிய பங்கு வகிக்கிறது.

ஆனால், இத்தொழிலில் பாதுகாப்பின்மை நாளுக்குநாள் அதிகரித்து வருகிறது. உயிரைப் பணயம் வைத்து கடலுக்கு மீன்பிடிக்கச் செல்வோர், புயல், சூறைக்காற்று, கடல்சீற்றம் போன்றவற்றால் பாதி நாட்களுக்கு மேல் தொழிலுக்கு செல்லமுடியாமல் பாதிக்கப்படுகின்றனர்.

கடலில் ஏற்படும் இயற்கைச் சீற்றங்களால் ஆண்டுக்கு 35-க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் உயிரிழக்கின்றனர். 250-க்கும் மேற்பட்டோர் காயமடைகின்றனர். கடந்த 5 ஆண்டுகளில் கடலில் ஏற்பட்ட விபத்து, உயிரிழப்புகள் குறித்து தெற்காசிய மீனவதோழமை அமைப்பு எடுத்த புள்ளி விவரம் மூலம் இத்தகவல் தெரியவந்துள்ளது.

இந்த அமைப்பின் செயலாளர் ஆரோக்கியராஜ் கூறியதாவது:

சுனாமி, புயல் போன்ற பேரிடர்கள் தவிர, சாதாரண சூழலில் கடலுக்கு செல்லும் மீனவர்கள் படகில் இருந்து கீழே விழுவது, படகு கவிழ்வது, கடற்கொள்ளையர்களால் தாக்கப்படுவது, கப்பல்கள் மோதுவது, ஆழ்கடலில் நோய்வாய்ப்பட்டு உரிய சிகிச்சை பெறமுடியாமல் போவது போன்றவற்றால் பாதிக்கப்படுகின்றனர்.

பிற மாநிலங்களுக்கும், பிற நாடுகளுக்கும் சென்று, அங்கேயே தங்கி ஆழ்கடல் மீன்பிடி தொழிலில் குமரி மாவட்ட மீனவர்கள் அதிகமானோர் ஈடுபட்டுள்ளனர். ஆனால், உரிய பாதுகாப்பு, தகவல்தொடர்பு இன்மையால் 75 சதவீத இறப்பு ஏற்படுகிறது.

200 நாட்டிக்கல் மைலுக்கு அப்பால் சர்வதேச கடல் பகுதியில் மீன்பிடிக்கும் தமிழக மீனவர்களுக்கு புயல், மழை நேரத்தில் தகவல்களைப் பரிமாற உபகரணங்கள் இல்லை. 10 விசைப்படகுக்கு ஒரு சேட்டிலைட் போனை, அரசு வழங்கியுள்ளது. பேரிடர் காலத்தில் இவற்றின் இணைப்பு துண்டிக்கப்பட்டுவிடுகிறது. எனவே, ரேடியோ போன் வழங்க வேண்டும்.

மீன்பிடி தொழில் அதிகம் நடைபெறும் கன்னியாகுமரியில் கடலில் காணாமல் போனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளவசதி ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்.

குளச்சலைச் சேர்ந்த விசைப்படகு உரிமையாளர் மற்றும் ஓட்டுநர் நலச்சங்க பொறுப்பாளர் ரக்சன் கூறியதாவது: வானிலை எச்சரிக்கையால் பாதி நாட்களுக்கு மேல் மீனவர்கள் கடலுக்குச் செல்லமுடியாமல் தொழில் கடுமையாக பாதிக்கப்படுகிறது. இந்நாட்களில் அரசு நிவாரணம் வழங்கவேண்டும்.

வளைகுடா நாடுகளில் தங்கி அரேபிய முதலாளிகளிடம் தமிழகத்தைச் சேர்ந்த மீனவர்கள் ஆயிரக்கணக்கானோர் மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர். அவர்களுக்கு முறையான பாதுகாப்பு இல்லாததால் சிறைபிடிக்கப்படுவதும், கடலிலேயே மரணமடைவதும் அதிகரித்து வருகிறது. இதற்கு, மத்திய அரசு உறுதியான நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மீன்பிடி தொழிலில் பாதுகாப்பில்லாததால் மீனவ இளைஞர்கள் மாற்றுத் தொழிலுக்கு மாறி வருகின்றனர் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x