

அதிமுக அரசு மக்களை நேரடியாகச் சந்திக்கத் தயங்குகிறது, அதனால்தான் உள்ளாட்சித் தலைவர்களை மறைமுகமாகத் தேர்வு செய்யும் அவசரச் சட்டத்தை நிறைவேற்றியுள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி விமர்சித்துள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ''உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சித் தலைவர்களை மறைமுகமாகத் தேர்ந்தெடுக்கும் நடைமுறையைச் செயல்படுத்துவது குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் தீவிர ஆலோசனை நடத்தப்பட்ட நிலையில் தற்போது அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.
கடந்த அக்டோபர் 2016-ல் தமிழகத்தில் நடைபெற வேண்டிய உள்ளாட்சித் தேர்தல்கள் கடந்த மூன்றாண்டுகளாக பல்வேறு முறைகேடுகளின் காரணமாக தொடர்ந்து தள்ளி வைக்கப்பட்டு வருகின்றன. அதிமுக அரசின் நடவடிக்கைகளின் மீதான நீதிமன்ற வழக்குகளின் காரணமாக டிசம்பர் 13-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் அட்டவணையை அறிவிக்க வேண்டுமென்று மாநில தேர்தல் ஆணையத்தை உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.
இந்நிலையில் 2011-ம் ஆண்டு அதிமுக ஆட்சிக்கு வந்த பிறகு, உள்ளாட்சி அமைப்புகளில் நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது. 2016-ல் மீண்டும் ஆட்சிக்கு வந்ததும், நேரடித் தேர்தல் முறை ரத்து செய்யப்பட்டு மறைமுகத் தேர்தல் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில், கடந்த 2018-ம் ஆண்டு ஜனவரி 11 அன்று சட்டப்பேரவையில் உள்ளாட்சி அமைப்புகளுக்கான மறைமுகத் தேர்தல் ரத்து செய்யப்பட்டு, நேரடித் தேர்தல் முறை கொண்டு வரப்பட்டது.
அப்போது சட்டப்பேரவையில் உரையாற்றிய உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி, தற்போது நடைமுறையில் உள்ள மறைமுகத் தேர்தலினால் பெரும்பாலான மேயர்கள், கவுன்சிலர்களின் நிர்பந்தத்தின் அடிப்படையில் அவர்களுக்கான வார்டு வளர்ச்சி திட்டங்களைத்தான் நிறைவேற்றுகிற சூழல் இருப்பதாகக் குறிப்பிட்டு, நியாயப்படுத்திப் பேசினார்.
தற்போது அந்த நியாயம் காற்றில் பறந்தது ஏன் ? பொதுவாக துக்ளக் ஆட்சியை மிஞ்சுகிற வகையில் அதிமுக அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய தடுமாற்றங்கள் ஏற்படுவதற்கு என்ன காரணம் ? அதிமுக ஆட்சியை ஒரு மக்கள் விரோத ஆட்சியாகவே கருதுவதால் மக்களை நேரிடியாகச் சந்திக்க தயக்கம் இருக்கிறது. இதுவே இந்த முடிவிற்குக் காரணமாகும்.
உள்ளாட்சி அமைப்புகளில் மக்கள் பங்கேற்கிற ஜனநாயகத்தை (Participatory Democracy) உருவாக்குவதுதான் மறைந்த ராஜீவ் காந்தி கண்ட கனவாகும். அந்த அடிப்படையில்தான் அரசமைப்புச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டு, உள்ளாட்சி அமைப்புகள் அதிக அதிகாரத்துடன் அமைக்கப்பட்டது. ஆனால், உள்ளாட்சி அமைப்புகளின் அடித்தளத்தைத் தகர்க்கிற வகையில் அதிமுக அரசு மக்கள் நேரடியாக வாக்களித்து வெற்றி பெற முடியாது என்கிற காரணத்தினால் மறைமுகத் தேர்தலைப் புகுத்தி, அதன் மூலம் கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி, பதவிகளை அபகரித்து விடலாம் என்று திட்டம் தீட்டி செயல்பட்டு வருகிறது. இதன் மூலம் குதிரை பேர அரசியலுக்கு அதிமுக தம்மை தயார்படுத்தி வருகிறது. இதைவிட ஒரு ஜனநாயகப் படுகொலை வேறு எதுவும் இருக்க முடியாது.
சமீபத்தில் நடைபெற்ற இடைத்தேர்தலில் மக்களின் வாக்குகளை விலை கொடுத்து வாங்கி வெற்றி பெற்ற அதிமுகவினர் தற்போது உள்ளாட்சி அமைப்புகளில் மறைமுகத் தேர்தல் மூலமாக கவுன்சிலர்களை விலைக்கு வாங்கி, பதவிகளைக் கைப்பற்றி விடலாம் என்கிற முயற்சியை முறியடிக்க வேண்டிய பொறுப்பு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்கு இருக்கிறது. அதிமுக அரசு தற்போது பிறப்பித்துள்ள அவசரச் சட்டத்தை ஒரு ஜனநாயக விரோத நடவடிக்கையாக கருதி காங்கிரஸ் கட்சி வன்மையாக கண்டிக்கிறது.
உச்ச நீதிமன்றத்தில் கொடுக்கப்பட்ட வாக்குறுதியின்படி நேரடித் தேர்தல் நடத்தாமல் மறைமுகத் தேர்தல் நடத்துவதற்கு அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டது கடுமையான கண்டனத்திற்குரியது. கொடுத்த வாக்குறுதியை மீறுவது உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கிற செயலாகும்”.
இவ்வாறு கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.