உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையை மாற்ற தமிழக அரசு அவசரச் சட்டம் : மார்க்சிஸ்ட் கண்டனம்

உள்ளாட்சித் தேர்தல் நடைமுறையை மாற்ற தமிழக அரசு அவசரச் சட்டம் : மார்க்சிஸ்ட் கண்டனம்

Published on

உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பார்கள் என தமிழக அரசு கொண்டுவந்துள்ள அவசரச் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை:

“உள்ளாட்சித் தேர்தலில் மாநகராட்சி மேயர், நகராட்சி மற்றும் பேரூராட்சித் தலைவர் ஆகியோரை மக்களால் தேர்வு செய்யப்பட்ட கவுன்சிலர்களே மறைமுகமாகத் தேர்ந்தெடுப்பார்கள் என அவசரச் சட்டத்தை அதிமுக அரசு கொண்டு வந்துள்ளது. இந்தச் சட்டத்திற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறது.

மேற்கண்ட தலைவர்களை நேரடியாக மக்கள் தேர்ந்தெடுக்கத் தேவையான மக்கள் ஆதரவு தங்களுக்கு இல்லை என்ற காரணத்தினாலும், இம்முறையினால் அதிமுக பாஜக அணி தேர்தலில் படுதோல்வியைச் சந்திக்க நேரிடும் என்ற காரணத்தினாலும் தேர்தல் முறையையே மாற்றியமைக்க அதிமுக அரசு முடிவு மேற்கொண்டுள்ளது.

கவுன்சிலர்கள் தலைவர்களை தேர்ந்தெடுக்க வகை செய்வதின் மூலம் கவுன்சிலர்களைக் கடத்துவதற்கும், குதிரை பேரம் செய்வதற்கும், தேர்தல் முடிவுகளை அதிகாரிகளைக் கொண்டு முறைகேடாக அறிவிப்பதற்கும் தான் இந்த அவசரச் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சுட்டிக்காட்ட விரும்புகிறது.

எனவே, தமிழக அரசு உடனடியாக இந்த அவசரச் சட்டத்தைத் திரும்பப் பெற்று, மீண்டும் பழைய முறைப்படி மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தலைவர்கள் தேர்வை நேரடியாக நடத்திட நடவடிக்கை எடுக்க வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது.

அதே நேரத்தில், அவசரச் சட்டத்தை திரும்பப் பெற வலியுறுத்தி அனைத்து ஜனநாயக அமைப்புகளும் கண்டனக் குரல் எழுப்பிட வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கேட்டுக்கொள்கிறது”.

இவ்வாறு கே.பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in