Published : 20 Nov 2019 07:19 PM
Last Updated : 20 Nov 2019 07:19 PM

மகளின் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்ற பெற்றோர்: விழுப்புரத்தில் மீட்பு

சேலம் அருகே சொந்தப் பேரக் குழந்தையை ரூ.3 லட்சத்திற்கு விற்ற தாத்தா, பாட்டி குறித்து குழந்தையின் தந்தை போலீஸில் புகார் அளித்தார். இதனையடுத்து விழுப்புரத்தில் குழந்தை மீட்கப்பட்டது. இன்று பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட உள்ளது.

சேலம் மாவட்டம், ஆட்டையாம்பட்டி அருகே உள்ள நைனாம்பட்டியில் வசிப்பவர் ராஜா (24). இவரும் அதே பகுதியைச் சேர்ந்த பொன்னுசாமி என்பவர் மகள் மீனாவும் (23) 2 ஆண்டுகளுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டனர். இவர்கள் திருமணத்தை பெற்றோர் ஏற்றுக்கொள்ளாததால் இருவரும் திருப்பூரில் தங்கி அங்குள்ள பனியன் கம்பெனியில் வேலை பார்த்து வந்தனர்.

இந்நிலையில் ஓராண்டு கழித்து மீனாவுக்கு கடந்த ஜூன் மாதம் திருப்பூர் அரசு மருத்துவமனையில் ஆண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்த நேரம் அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது. இதையடுத்து அவர் கோவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இந்தத் தகவல் சேலத்தில் உள்ள மீனாவின் பெற்றோருக்குத் தெரியவந்தது.

அவர்கள் மீனாவை சேலத்திற்கு அழைத்து வந்து, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சையில் மீனா இருக்கும்போதே கடந்த ஆகஸ்ட் மாதம் மீனா -ராஜா தம்பதியினரின் 2 மாதக் குழந்தையை ரூ.3 லட்சத்துக்கு விற்றுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன் ஓரளவு தெளிவு பெற்ற மீனா குழந்தை மற்றும் கணவர் குறித்து விசாரித்துள்ளார்.

குழந்தையை விற்றுவிட்டதாக மீனாவின் பெற்றோர்கள் தெரிவித்துள்ளனர். ''கணவர் பற்றித் தெரியாது. நீ இந்த விஷயத்தை இத்துடன் மறந்துவிடு'' என்று தெரிவித்துள்ளனர். ஆனால், தனது குழந்தையை மீட்க வேண்டும். அதற்கு முன் கணவரைச் சந்திக்க வேண்டும் என்பதற்காக திருப்பூருக்குச் சென்றுள்ளார் மீனா. அங்கு கணவரைச் சந்தித்து நடந்ததைக் கூற இருவரும் சேர்ந்து ஆட்டையாம்பட்டி காவல் நிலையத்தில் தங்கள் குழந்தை ரூ.3 லட்சத்திற்கு விற்கப்பட்டுள்ளதாகக் கூறி மீட்டுத் தரவேண்டும் எனப் புகார் அளித்துள்ளனர்.

ஆனால், போலீஸார் அலட்சியமாக இருந்துள்ளனர். இந்நிலையில் மீனா தனது கணவர் ராஜாவுடன் நேற்று முன்தினம் (18-ம் தேதி) சேலம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்து ஆட்சியரிடம் புகார் அளித்தார். உரிய நடவடிக்கை எடுக்க ஆட்சியர் ராமன் உத்தரவிட்டார்.

இதையடுத்து களத்தில் இறங்கிய போலீஸார் மீனாவின் பெற்றோரைப் பிடித்து விசாரித்தனர். விசாரணையில் குழந்தையை விழுப்புரம் மாவட்டம் திருநாவலூரில் ஒரு தம்பதியிடம் விற்றதாகத் தெரியவந்தது. அதன் அடிப்படையில் அங்கு சென்ற போலீஸார் குழந்தையை மீட்டனர். சேலத்திற்குப் பாதுகாப்பாக அழைத்து வரப்பட்ட மீனாவின் குழந்தை நேற்றிரவு அங்குள்ள காப்பகத்தில் ஒப்படைக்கப்பட்டது.

மீட்கப்பட்ட குழந்தை இன்று ஆட்சியர் அலுவலகத்தில் ராஜா, மீனா தம்பதியிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. குழந்தையை விற்பனை செய்தது உறுதியானால் மீனாவின் தந்தை பொன்னுசாமி உள்ளிட்டோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x