Published : 20 Nov 2019 05:26 PM
Last Updated : 20 Nov 2019 05:26 PM

தேர்தல் வெற்றியில் மட்டும்தான் பங்கா?- முரசொலி நில விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகள் கண்டுகொள்ளவில்லை: கே.என்.நேரு

தேர்தல் வெற்றியில் மட்டும் பங்கு கொள்வது கூட்டணிக் கட்சிகளின் நிலையா? முரசொலி நில விவகாரத்தை எதிர்க்கட்சிகள் பெரிதுபடுத்தியபோது கூட்டணிக் கட்சிகள் எதிர்த்துக் குரல் கொடுக்கவில்லை என கே.என்.நேரு வேதனை தெரிவித்துள்ளார்.

ஸ்டாலின் மிசாவில் கைதாகவில்லை என்று உருவான சர்ச்சையும் முரசொலி நில விவகாரமும் திமுகவை சமீபத்தில் தடுமாற வைத்த இரண்டு விஷயங்கள். முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என பாமக நிறுவனர் ராமதாஸ் பிரச்சினை கிளப்ப அதிமுக, பாஜக உள்ளிட்ட கட்சிகள் இதுகுறித்து விமர்சனம் செய்தன.

திமுக தரப்பில் ஆவணங்களைக் காட்டியும் விமர்சனம் தொடர்ச்சியாக வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் கூட்டணிக் கட்சிகள் திமுகவுக்கு ஆதரவாக பெரிதாக ஆதரவு தெரிவிக்கவில்லை என்கிற விமர்சனம் உள்ளது. இது குறித்து காமதேனு வார இதழுக்கு அளித்த பேட்டியில் முன்னாள் அமைச்சர் கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

பேட்டியில் கருணாநிதி ஸ்டாலின் ஆளுமை ஒப்பீடு, திமுகவில் சீனியர்களின் ஆதிக்கம் உள்ளதா? என்பது குறித்தும் பதிலளித்துள்ளார்.

திமுகவில் சீனியர்களின் அதிக்கம் அதிகமாக இருக்கிறது என்கிறார்களே?

அனுபவம் பெற்ற சீனியர்களின் ஆலோசனைகளைக் கேட்டுக்கொள்வதில் என்ன தவறு இருக்க முடியும்? கலைஞரும் அதைச் செய்தார். தற்போது ஸ்டாலினும் கேட்டுக் கொள்கிறார். அதை சீனியர்களின் ஆதிக்கம் என்று சொல்லமுடியாது.

உங்கள் பார்வையில் நிர்வாகத் திறனில் கலைஞரையும் ஸ்டாலினையும் ஒப்பிட முடியுமா?

தந்தையைப் போலத்தான் பிள்ளையும். எல்லாவற்றை யும் காரண காரியங்களோடு ஆராய்ந்து அணுகுகிறார். அனைவரையும் அனுசரித்து நடந்துகொள்கிறார். என்னைப் பொறுத்தவரை இருவருக்கும் பெரிய வித்தியாசம் எதுவுமில்லை. பொதுவாக, கலைஞர் அனைத்தையும் எங்களுக்கு கற்றுத் தந்திருக்கிறார். புதிய தலைவருக்கு எப்படிக் கட்டுப்பட வேண்டுமோ அதையும் எங்களுக்குக் கற்றுக் கொடுத்திருக்கிறார்.

முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்ற குற்றச்சாட்டுக்கு கூட்டணிக் கட்சித் தலைவர்கள் அதிகம் கண்டுகொள்ளவில்லை என்று வருத்தப்பட்டிருக்கிறீர்களே?

ஆமாம் வருத்தம்தான். இருக்காதா? கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஒரு பிரச்சினை என்றால், திருமாவளவனுக்கு ஒரு பிரச்சினையென்றால், இஸ்லாமியர்களுக்கு ஏதாவது ஒன்று என்றால் திமுக முன்னுக்கு வரும். ஆதரவாகக் குரல் கொடுக்கும், கண்டனம் தெரிவிக்கும். பஞ்சமி நிலவிவகாரத்தில் 80 ஆண்டு காலத்துக்கான ஆவணம் வைத்திருக்கிறோம் என்று எங்கள் தலைவர் சொல்லிவிட்ட பிறகும்கூட அதை இன்னமும் விமர்சனம் செய்து பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

சமூக ஊடகங்களில் கடுமையாக விமர்சனம் செய்து கொண்டிருக்கிறார்கள். இதையெல்லாம் தக்க முறையில் எங்கள் கூட்டணிக் கட்சிகள் எதிர்கொண்டு பதிலளிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். ஆனால், அப்படி யாருமே கண்டனம் தெரிவிக்காதது எங்களுக்கு வருத்தம்தான்.

ஒரு கட்சியின் தனிப்பட்ட பிரச்சினைக்காக கூட்டணியில் இருக்கும் மற்ற கட்சிகள் தலையிட வேண்டும் என எதிர்பார்ப்பது சரிதானா?

கூட்டணிக் கட்சிகள் என்றால் தேர்தல் வெற்றியைப் பங்குபோடுவது மட்டுமல்ல... கூட்டணியில் இருக்கும் ஒரு கட்சிக்கு எதிராக நியாயமற்ற வகையில் ஒரு குற்றச்சாட்டைக் கிளப்பும்போது அதைக் கண்டிக்க வேண்டிய பொறுப்பும் கடமையும் கூட்டணியில் அங்கம் வகிக்கும் அனைத்துக் கட்சிகளுக்கும் உண்டு.

இவ்வாறு கே.என்.நேரு பதிலளித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x