

பொதுச்சாலையை ஆக்கிரமித்து முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைக்கத் தடை கோரிய வழக்கில் அரசு பதிலளிக்கவும், தற்போதைய நிலையே நீடிக்கவும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி அருகே உள்ள அமிர்தாபுரத்தில் பொதுமக்கள் பயன்பாட்டில் உள்ள சாலையை ஆக்கிரமித்து மறைந்த முன்னாள் முதல்வர்கள் எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா சிலையை வைக்கவிருப்பதாகவும் அதற்குத் தடை கேட்டும் திருத்தணியைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்தார்.
அவரது மனுவில், “போலிப் பத்திரங்கள் மூலம் பொதுச்சாலையை தனியார் இடம் என மாற்றி அங்கு எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலைகள் வைக்க முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. பொதுச்சாலையை தனியார் இடம் என அறிவிக்கப்பட்டதை ரத்து செய்ய வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு நீதிபதிகள் எம்.எம்.சுந்தரேஷ் மற்றும் டீக்காராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிலை வைக்கப்பட உள்ள இடம் பொதுச்சாலையா? என கண்டறிய அரசுத் தரப்பில் கால அவகாசம் கேட்கப்பட்டது.
இதையடுத்து, பொதுச்சாலையை ஆக்கிரமித்து எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவிற்கு சிலை வைப்பதில் தற்போதைய நிலையே நீடிக்க வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுவுக்கு இரண்டு வார காலத்திற்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டு வழக்கை ஒத்திவைத்தனர்.