

தேவைப்பட்டால் இணைவோம் என்றுதான் தானும் ரஜினியும் கூறியிருப்பதாக, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார்.
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகத்தில் இன்று (நவ.20) கவுரவ டாக்டர் பட்டம் பெறுவதற்காக ஒடிசா சென்று திரும்பிய அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசனை, கட்சி நிர்வாகிகள் வாழ்த்தினர்.
இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய கமல்ஹாசன், "எனக்குக் கிடைக்கும் பட்டங்கள், பாராட்டுகளை விட, இங்கு கிடைக்கும் அன்புதான் எனக்கு எல்லாவற்றையும் விட பெரிது. நான் தமிழகத்தின் குழந்தை. என்னை 5 வயதிலிருந்து வெவ்வேறு வயதுடையவர்கள் என்னைக் கைதூக்கி விட்டதால்தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்.
இந்த அன்பை செயல்வடிவமாக்க வேண்டும் என்பதுதான் என் ஆசை. எனக்கு நீங்கள் காட்டும் அன்பை தமிழகத்திற்குக் காட்ட வேண்டும். அப்படியானால் என்னுடைய முனைப்பும், யாத்திரையும் கண்டிப்பாக நடக்கும் என்பதற்கான சாத்தியங்கள் அடுத்தடுத்து உங்களுக்கே தெரியும்.
இளைஞர்கள் வேலைவாய்ப்பு, விவசாயம் ஆகிய இரண்டும் மிகவும் முக்கியமான, முதலுதவி செய்யப்பட வேண்டியவை என்பதை மக்கள் நீதி மய்யம் உணர்ந்திருக்கிறது. அதற்கான செயல்பாடுகள் விரைவில் நடக்கும். 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்' என்பதற்கு ஏற்ப விரைவில் இந்த வேலைகளைச் செய்து காட்டுவோம். நம் கட்சி சின்னத்தில் இருப்பது போல அனைத்துக் கைகளும் ஒன்றுகூட வேண்டும்" என கமல் தெரிவித்தார்.
அப்போது, ரஜினியுடன் நீங்கள் இணைந்து எப்போது செயல்படுவீர்கள் என, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இன்ன தேதி என்பதைக் குறிப்பிட முடியாது. நாங்கள் சொன்னதை கவனித்துப் பாருங்கள். தேவைப்பட்டால் இணைவோம் என்றுதான் சொல்லியிருக்கிறோம். தமிழகத்திற்காக என்பதுதான் நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய செய்தி. எங்கள் நட்பை விட தமிழகத்தின் நலன்தான் முக்கியம்," என கமல் தெரிவித்தார்.
ரஜினி தனியாக கட்சி ஆரம்பித்து இரு கட்சிகள் கூட்டணி அமைக்குமா அல்லது ரஜினி மக்கள் நீதி மய்யத்தில் இணைவாரா என செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, "இதெல்லாம் நியாயமே கிடையாது" என கமல் பதிலளித்தார்.