சீட் கொடுக்காவிட்டால் யாரெல்லாம் போட்டி வேட்பாளராக களத்தில் இறங்க வாய்ப்பு? - உளவுத்துறை உதவியுடன் அதிருப்தியாளர் பட்டியல் தயாராகிறது

சீட் கொடுக்காவிட்டால் யாரெல்லாம் போட்டி வேட்பாளராக களத்தில் இறங்க வாய்ப்பு? - உளவுத்துறை உதவியுடன் அதிருப்தியாளர் பட்டியல் தயாராகிறது
Updated on
1 min read

மதுரை மாநகராட்சி தேர்தலில் அதிமுகவில் ‘சீட்’ கொடுக்கா விட்டால் வார்டு வாரியாக யாரெல்லாம் போட்டி வேட்பாளராக களம் இறங்க வாய்ப்புள்ளது என்ற ரகசியப் பட்டியல் தயார் செய்யும் பணியை ஆளும்கட்சியினர் உளவுத்துறை போலீஸார் துணையுடன் தொடங்கியுள்ளனர்.

மதுரை மாநகராட்சியிலுள்ள 100 வார்டுகளின் கவுன்சிலர் தேர்தலில் போட்டியிட அதிமுகவில் 550 பேர் விருப்பமனு வழங்கியுள்ளனர். அவர்களில் தேர்தலில் போட்டியிட யாருக்கு ‘சீட்’ வழங்கலாம் என்ற ஆலோசனையில் ஆளும்கட்சி ஈடுபட்டுள்ளது.

அதேநேரத்தில், ‘சீட்’ கிடைக்காதபட்சத்தில் யாரெல்லாம் கட்சிக்கு எதிராகப் போட்டி வேட்பாளராக களம் இறங்க வாய்ப்புள்ளது என்ற பட்டி யலையும் தயார் செய்து அனுப்ப மாவட்ட தலைமைக்கு கட்சித் தலைமை கேட்டுக்கொண்டுள்ளது.

அதற்கான பணி அந்தந்த வார்டு வாரியாக உளவுத் துறை போலீஸார் உதவியுடன் ஆளும்கட்சி முக்கிய நிர்வாகி கள் விசாரணையைத் தொடங்கி யுள்ளனர். அவர்களுக்கு ‘சீட்’ கொடுக்காதபட்சத்தில் அவர் களை வேட்பாளர் தேர்வுக்கு முன்பாகவே சாமாதானப்படுத்தும் முயற்சியில் கட்சித்தலைமையும், உள்ளூர் முக்கிய நிர்வாகிகளும் ஈடுபடுவார்கள். அதற்காக இந்த அதிருப்தியாளர்கள் பட்டியல் தயாரிக்கும் பணி நடப்பதாக ஆளும்கட்சியினர் கூறுகின்றனர்.

இது குறித்து அதிமுகவினர் கூறியதாவது:

அதிமுக ஆளும்கட்சியாக இருப் பதால் போட்டியிட ஒவ்வொரு வார்டிலும் அதிகமானோர் விருப்பமனு கொடுத்துள்ளனர். ஒருவருக்கு ‘சீட்’ கொடுத்தால் மற்றவர்கள் அதிருப்தியடைய வாய்ப்புள்ளது. அவர்களை எப்படிச் சரிக்கட்டுவது, அவர்கள் மூலம் கட்சி அறிவிக்கும் வேட்பாள ருக்கு சிக்கல் ஏற்படுமா? என்று கட்சித் தலைமை ஆராயும். அதனால், வார்டு அளவில் வெற்றி பெறக்கூடிய செல்வாக்கு யாருக்கு அதிகம் உள்ளது, ‘சீட்’ கொடுத்தால் யாரெல்லாம் அதிருப்தி யடைவார்கள், அவர்கள் கட்சித் தலைமைக்கு எதிராக திரும்பு வார்களா? என்ற விசாரணை உளவுத்துறை போலீஸாரை கொண்டு நடக்கிறது.

ஜெயலலிதா இருந்தவரை ‘சீட்’ கிடைக்காதவர்கள் கட்சிக்கு எதிராக மறைமுகமாக வேலைபார்த்தனர். தற்போது ‘சீட்’ கிடைக்காவிட்டால் போட்டி வேட்பாளராக களம் இறங்க வாய்ப்புள்ளது.

‘சீட்’ கிடைக்காவிட்டால் யாரெல் லாம் போட்டி வேட்பாளராக களம் இறங்க வாய்ப்புள்ளது என்பதை விருப்பமனு கொடுத்தவர்களின் பட்டியலை வைத்து உளவுத்துறை போலீஸார் ரகசிய விசாரணை மேற்கொண்டுள்ளனர், என்று கூறினர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in