

ஆந்திராவைச் சேர்ந்த வெங்கட சத்ய நாராயணா (26) என்பவர் சென்னை, துரைப்பாக்கம் ரேடியல் சாலையில் கழிவுகளை சாலையில் சிதறவிட்டபடி சென்ற லாரியினால் தன் பைக்கில் நிலைதடுமாறி சாலையில் விழ பின்னால் வந்த கார் இவர் மீது ஏறி இறங்கியதில் பலியானார்.
சம்பவ இடத்திலேயே பலியான சத்ய நாராயணா சென்னையில் ஒரு நிறுவனத்தில் மூத்த பொறியாளராகப் பணியாற்றினார். மகனைப் பறிகொடுத்த பெற்றோர் வெங்கட சுப்பாராவ் மற்றும் நாகராஜம்மா ஆகியோர் சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
நீதிபதி உமா மகேஸ்வரி முன் இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது கார் காப்பீட்டு நிறுவனம், அந்த வழியாக வந்த கார் சரியாகத்தான் வந்தது லாரியும் வாகனத்தை ஓட்டிச் சென்றவரும்தான் விபத்துக்குக் காரணம் என்ரு வாதாடியது.
மோட்டார் சைக்கிளின் முன்னால்தான் லாரி சென்றது எனவே விபத்துக்கு நாங்களும் பொறுப்பல்ல என்று லாரி இன்சூரன்ஸ் நிறுவனமான பாரதி ஆக்சா நிறுவனமும் வாதிட்டது.
ஆனால் இருவர் வாதங்களையும் ஏற்க மறுத்த நீதிபதி, விசாரணையில் கார் மற்றும் லாரி ஓட்டுநர்கள் கவனக்குறைவாகவும் வாகனத்தை அதிவேகமாகவும் ஓட்டியதே காரணம் என்பது விசாரணையில் தெரியவந்துள்ளது. குப்பை லாரி குப்பைகளை அஜாக்கிரதையாக கிழே சிந்தியபடி சென்றுள்ளது, இதனால் வாழைத்தண்டு குப்பை லாரியிலிருந்து விழுந்தது, இதில்தான் இருசக்கர வாகன ஓட்டி தடுமாறி கீழே விழுந்தார். பின்னால் கார் போதிய இடைவெளி விட்டு வராததால் காரினால் பிரேக் அடிக்க முடியவில்லை, எனவே டிரைவர்கள் இருவரும் விபத்துக்குக் காரணம். எனவே இரண்டு காப்பீட்டு நிறுவனங்களும் மனுதாரருக்கு ரூ.78.65 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.