Published : 20 Nov 2019 12:54 PM
Last Updated : 20 Nov 2019 12:54 PM

கருவேப்பிலைபாளையம் கிராமம் எங்கே இருக்கிறது? - விழுப்புரத்திலா..? - கள்ளக்குறிச்சியிலா..?

நிர்வாக வசதிக்காக விழுப்புரம் மாவட்டத்தை இரண்டாக பிரித்து, புதிதாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தை தோற்றுவித்து கடந்த ஜனவரி மாதம் 8ம் தேதி சட்டப்பேரவையில் முதல்வர் பழனிசாமி அறிவித்தார்.

அதன்படி, தமிழகத்தின் 33வது மாவட்டமாக கள்ளக்குறிச்சி உருவாக்கப்பட்டுள்ளது. இம்மாவட்டத்தின் கீழ் 523 வருவாய் கிராமங்கள் வருகின்றன. விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தின் கீழ் 576 வருவாய் கிராமங்கள் வருகின்றன. பல நூறு கிராமங்களை வருவாய் துறையினர் திட்டமிட்டு பிரித்தாலும் ஒரு கிராமம் இரு மாவட்டத்திற்குள்ளும் வந்து சர்ச்சையை கிளப்பியிருக்கிறது.

கருவேப்பிலைபாளையம் என்ற அந்த கிராமம் விழுப்புரம் அருகே உள்ளது. சுமார் 5 ஆயிரம் பேர் அங்கு வசிக்கின்றனர். 2,752 வாக்காளர்கள் உள்ளனர்.

இக்கிராமம் கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்குட்பட்ட திருநாவலூர் ஒன்றியத்தில் உள்ள மடப்பட்டு, சிறுத்தனூர், சிறுளாப்பட்டு வருவாய் கிராமங்களிலும், விழுப்புரம் மாவட்டத்திற்குட்பட்ட திருவெண்னைநல்லூர் ஒன்றியத்திலுள்ள காந்தலவாடி வருவாய் கிராமத்தின் கட்டுப்பாட்டிலும் வருகிறது. அதாவது இக்கிராமம் 4 வருவாய் கிராமங்கள் நிர்வாகத்தின் கீழ் வருகிறது. அடுத்தடுத்து உள்ள வீடுகளில் ஒரு வீடு கள்ளக்குறிச்சி மாவட்டத்திலும், ஒரு வீடு விழுப்புரம் மாவட்டத்திலும் வருகிறது.

இப்படி 4 வருவாய் கிராமங் களுக்குள் வருவதால், இந்த கருவேப்பிலைபாளையம் கிராமம் 3 ஒன்றிய கவுன்சிலர்கள், 2 மாவட்ட கவுன்சிலர்கள், 2 ஒன்றியக்குழுத் தலைவர்கள், 5 வருவாய் கிராமங்கள், 2 காவல் நிலையங்கள், 2 தாலுக்காக்கள்,2 கோட்டங்கள், 2 மாவட்டங்கள் என சிதைக்கப்பட்டுள்ளது.

இது குறித்து கருவேப்பிலை பாளையம் கிராம மக்களிடம் கேட்டதற்கு, "இப்படி குழப்பமாக இரு மாவட்டத்திற்குள்ளும் எங்கள் கிராமத்தைச் சேர்த்தால் அரசின் எந்த ஒரு திட்டத்தையும் இங்கு முழுமையாக செயல்படுத்த முடியாது. ஒரு மாவட்டத்தை வறட்சி மாவட்டமாக அறிவித்தால், மற்றொரு மாவட்டத்தில் உள்ள அடுத்த வீட்டுக்காரருக்கு நிவாரண உதவிகள் சென்று சேராது. ஒரு குற்றம் நிகழ்ந்தால் போலீஸாருக்குள் எல்லைப் பிரச்சினை ஏற்படும். எங்கள் கிராமத்தை ஒரு ஊராட்சி எல்லைக்குள் கொண்டு வர வேண்டும்; அதையும் விழுப்புரம் மாவட்டத்தோடு இணைக்க வேண்டும். இதுதொடர்பாக ஆட்சியர் அண்ணாதுரையிடம் மனு ஒன்றை அளித்திருக்கிறோம்'' என்று தெரிவித்தனர்.

இதுகுறித்து வருவாய்துறை அலுவலக வட்டாரங்களில் கேட்டதற்கு, "புதுச்சேரி - தமிழக எல்லையில் உள்ள திருக்கனூரில் ஒரு பகுதி புதுச்சேரியாகவும், மற்றொரு பகுதி தமிழகத்திலும் இருந்து வருகிறது. இதேபோல விநாயகம்பட்டு, பி எஸ் பாளையம், வடமங்கலம் உள்ளிட்ட கிராமங்களில் வீதியின் ஒரு புறம் புதுச்சேரியிலும், மறுபுறம் தமிழகத்திலும் வருகிறது.

அதே மாதிரியான சிக்கல் தான் இதுவும். ஆனாலும் ஒரு கிராமம் இரு மாவட்டங்களில் வருவது நிர்வாக சிக்கலை ஏற்படுத்தவே செய்யும். உயர திகாரிகள் உரிய பரிசீலனை செய்து சரி செய்வார்கள்'' என்று தெரிவித்தனர்.

- எஸ்.நீலவண்ணன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x