Published : 20 Nov 2019 12:37 PM
Last Updated : 20 Nov 2019 12:37 PM

காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் மாசடைந்த 5 ஏரிகள்: விளைச்சல் குறைந்ததால் விவசாயிகளுக்கு பெரும்பாதிப்பு

காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் மாசடைந்த வையாவூர் ஏரி நீர்.

காஞ்சிபுரம் அருகே சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் 5 ஏரிகளில் போதிய அளவு தண்ணீர் இருந்தும், அதைப் பயன்படுத்த முடியாததால் இந்த ஏரிகளைச் சுற்றியுள்ள பகுதிகளில் விவசாயம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

காஞ்சிபுரம் பகுதியில் பொதுப் பணித் துறையின் கட்டுப்பாட்டில் நத்தப்பேட்டை, வையாவூர், கலி யனூர், பூசிவாக்கம் மற்றும் ஊத்துக்காடு ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளைச் சுற்றி சுமார் 1,000 ஏக்கருக்கும் அதிகமான அளவில் விவசாயம் நடைபெற்று வருகிறது. ஆனால், தொடர்ந்து இந்த ஏரிகளில் சாயப்பட்டறை கழிவுகள் கலப்பதால் ஏரி நீர் முற்றிலும் மாசடைந்து வருவதாக சொல்லப்படுகிறது.

காஞ்சிபுரம் நகரத்தில் உள்ள பாதாளச் சாக்கடையில் வீட்டு கழிப்பறை கழிவுகள் வெளியேற் றப்படுகின்றன. இந்தக் கழிவு களை சுத்திகரிப்பு செய்ய நத்தப்பேட்டை பகுதியில் சுத்தி கரிப்பு நிலையம் அமைந்துள்ளது. இந்த நிலையத்தில் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யப்பட்டு, அந்த நீர்தான் ஏரியில் வெளியேற்றப்பட்டு வந்தது

சமீப காலமாக, காஞ்சி நகர பாதாளச் சாக்கடையில் சாயப் பட்டறை கழிவுகளையும், அரிசி ஆலை கழிவுகளையும் பலர் அனுமதி இல்லாமல் வெளியேற்றி வருகின்றனர். எனவே கழிவு நீரை சுத்திகரிக்கும்போது, சாயப் பட்டறை மற்றும் அரிசி ஆலை மாசின் தன்மையை முழுதுமாக அகற்ற முடிவதில்லை. அந்த மாசுடன்தான் தண்ணீர் நத்தப் பேட்டை ஏரிக்குச் செல்கிறது. இந்த ஏரியில் மட்டுமின்றி, பல் வேறு கால்வாய்கள் மூலம் கலியனூர் ஏரி, பூசிவாக்கம் ஏரி, வையாவூர் ஏரி, ஊத்துக்காடு ஏரிகளிலும், வேகவதி ஆற்றிலும் சாயப்பட்டறை, அரிசி ஆலை கழிவுகள் வந்து சேருகின்றன. .இதனால் இப்பகுதிகளில் விவசாயம் முழுதுமாக பாதிப்படைந்துள்ளது.

இதுகுறித்து விவசாய தொழிலாளர் சங்கத்தின் காஞ்சிபுரம் பகுதிச் செயலர் ஆறுமுகம் கூறியதாவது: சாயப்பட்டறை கழிவுகளும், அரிசி ஆலைக் கழிவுகளும் ஏரிகளில் கலப்பதால் ஏரி நீர் முற்றிலும் மாசடைந்துள்ளது. இதன் காரணமாக குடிநீரும் மாசுபட்டுள்ளது. மாசு கலந்த நீரை விவசாயத்துக்கு பயன்படுத்தும்போது மகசூல் குறைவதுடன், மண்ணின் இயல்பு தன்மையும் பாதிக்கப்பட்டுள்ளது.

இதுபோல் நத்தப்பேட்டை ஏரியை நம்பி விவசாயம் செய்த நூற்றுக்கணக்கான ஏக்கர் நிலங்கள் தரிசாக மாறி வருகின்றன. கலியனூர், வையாவூர், பூசிவாக்கம், ஊத்துக்காடு ஏரிகளைச் சுற்றியுள்ள நிலங்களும் பாதித்துள்ளன. இதில் பொதுப்பணித் துறையும், நகராட்சி நிர்வாகமும் இணைந்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, விவசாய நிலங்களையும், ஏரி நீரையும் பாதுகாக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.

இதுகுறித்து பொதுப்பணித் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஏரிகளில் கழிவுநீர் கலப்பதை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து உரிய முறையில் சுத்திகரிப்பு செய்து தண்ணீரை ஏரிக்குள் வெளியேற்ற வலியுறுத்தப்படும்’ என்றனர்.

- இரா.ஜெயபிரகாஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x