

உள்ளாட்சி அமைப்புகளில் வரி உயர்வு நிறுத்தப்பட்டிருப்பது தேர்தல் ஆதாயக் கண்ணோட்டம் என, இந்தியக் கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் இரா.முத்தரசன் குற்றம்சாட்டியுள்ளார்.
இதுதொடர்பாக இரா.முத்தரசன் இன்று (நவ.20) வெளியிட்ட அறிக்கையில், "அடுத்து வரும் டிசம்பர் மாதத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவிக்கப்படும் என தமிழ்நாடு மாநிலத் தேர்தல் ஆணையம் உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது.
கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்படாத தமிழ்நாடு உள்ளாட்சி தேர்தல் இந்த முறையாக நடக்குமா என்ற கேள்வி மக்கள் மனதில் நிலவி வருகிறது. இந்த சந்தேக நிழலை விலக்கும் வகையில் தமிழ்நாடு அரசு உள்ளாட்சி தேர்தலை கட்டாயம் நடத்த, மாநில தேர்தல் ஆணையத்திற்கு ஒத்துழைக்க வேண்டும்.
நேற்று நடைபெற்ற தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள் என நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தலைவர் தேர்தல், வாக்காளர்கள் நேரடியாக தேர்வு செய்வதற்கு மாறாக மறைமுகத் தேர்தல் நடத்தலாம் என்று முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும், இந்த மாற்றுத் திட்டத்திற்கு ஆளுநர் ஒப்புதல் பெறவிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்திகள் உண்மை எனில் அதற்கு இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி தனது கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துக் கொள்கிறது. உள்ளாட்சி அமைப்புகளின் தலைவர்கள் வாக்காளர்களால் தேர்ந்தெடுக்கும் ஜனநாயக நடைமுறைகளை உள்ளாட்சி தேர்தலில் கடைப்பிடிக்க வேண்டும் என தமிழ்நாடு அரசை வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.
மேலும், தமிழ்நாடு அரசு அண்மையில் உள்ளாட்சி அமைப்புகளில் கடுமையான வரி உயர்வு செய்தும், புதுப்புது வரிகளை விதித்தும் மக்களை கசக்கி பிழிந்து வசூல் செய்து வந்தது.
மக்கள் தாங்க முடியாத வரிச்சுமையை ரத்து செய்யுமாறு பொதுமக்களும், எதிர் கட்சிகளும் போராடி வந்தன. அப்போது பரிசீலினைக்குக் கூட எடுத்துக் கொள்ளதாக தமிழ்நாடு அரசு, தற்போது உயர்த்தப்பட்ட வரிகளை நிறுத்தி வைத்துள்ளது. இதுவரை புதிய வரிவிகிதங்களில் செலுத்தியுள்ளோரின் உபரித் தொகை எதிர் வரும் காலங்களில் சரி செய்யப்படும் என அறிவித்துள்ளது. இது தேர்தல் ஆதாயக் கண்ணோட்டத்துடன் அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அப்படி தவாறான நோக்கம் அரசுக்கு இல்லை எனில் உயர்த்தப்பட்ட வரிகளை முழுமையாக ரத்து செய்து அறிவிக்க வேண்டும்," என இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.