Published : 20 Nov 2019 11:41 AM
Last Updated : 20 Nov 2019 11:41 AM

காவல்துறையின் பெருமையை உணர்த்தும் காவலர் அருங்காட்சியகம்

காவலர்கள் பல்வேறு காலக்கட்டத்தில் அணிந்த உடைகள் குறித்த உருவபொம்மைகள்.

கோவை ஸ்டேட் பேங்க்சாலையில் ரயில் நிலையம் எதிரே, சிவப்பு, வெள்ளை வர்ண கட்டிடத்தில், காவல்துறைக்கே உரிய கம்பீரத்துடன் காட்சியளிக்கிறது ‘காவலர் அருங்காட்சியகம்’. ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தை, புனரமைப்பு செய்து, காவல்துறையின் பெருமையை விளக்கும் வகையில், மாநகர காவல் துறை நிர்வாகத்தால் இந்த அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டுள்ளது.

1918-ம் ஆண்டு எப்.ஏ.ஹாமில்டன் என்ற ஆங்கிலேய காவல்துறை அதிகாரியால் 3,488 சதுரடி பரப்பில் மேற்கண்ட இடத்தில் ஹாமில்டன் கிளப் கட்டிடம் கட்டப்பட்டது. நூறாண்டை கடந்த இக்கட்டிடத்தில் மொத்தம் 16 அறைகள், பெரிய அரங்கு, டேபிள் டென்னிஸ் அரங்கு, நூலகம், பொழுதுபோக்கு இடம் உள்ளிட்ட அனைத்து வசதிகளும் இருந்தன. ஆண்டுகள் செல்லச் செல்ல, முறையான பராமரிப்பின்றி சீர்குலைந்தது இந்த கட்டிடம். கடந்த 2016-ம் ஆண்டு மாநகர காவல் ஆணையராக பணியாற்றிய அமல்ராஜ், இந்த கட்டிடத்தை பழமை மாறாமல் புனரமைத்து காவலர் அருங்காட்சியகம் அமைக்க முடிவு செய்தார். அவரது இந்த நடவடிக்கைக்கு அரசும் ஒப்புதல் அளித்தது.

இதையடுத்து, ரூ.60 லட்சம் மதிப்பில் இந்த கட்டிடம் சீரமைக்கப்பட்டது. காவல் துறையினரின் பெருமையை விளக்கும் வகையில், பல்வேறு இடங்களில் இருந்து அரிய பொருட்கள் இங்கு காட்சிக்கு வைக்கப்பட்டு, அருங்காட்சியகம் உருவாக்கப்பட்டது. இதை கடந்த ஆண்டு மே மாதம் 17-ம் தேதி, முதல்வர் கே.பழனிசாமி திறந்து வைத்தார்.


அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ள துப்பாக்கிகள், கத்திகள்.

பல்வேறு வகையான பொருட்கள்

அருங்காட்சியகத்தின் வளாகத்துக்குள் நுழைந்தவுடனேயே, துப்பாக்கி ஏந்திய காவலருக்கு அடுத்து பீரங்கி, ஏவுகணை நம்மை வரவேற்கின்றன. அடுத்து ஆங்கிலேயே காவல் அதிகாரி என்.இ.க்யூ மெயின்வாரிங் என்பவரால், இந்திய காவல்துறைக்கு வழங்கப்பட்ட 17 கிலோ எடையும், 9.3 அடி நீளமும் கொண்ட நீளத் துப்பாக்கி கம்பீரமாக காட்சியளிக்கிறது.

அருங்காட்சியகத்துக்கு வந்த பார்வையாளர்களிடம், அங்கு வைக்கப்பட்டிருந்த பொருட்களின் பெருமையை விளக்கிக் கூறிக் கொண்டிருந்தனர் காவல்துறை அதிகாரி ஆறுக்குட்டி, ஓய்வு பெற்ற காவல்துறை அதிகாரி சவுந்தரராஜன் உள்ளிட்டோர்.

அருங்காட்சியகத்தின் சிறப்புகள் குறித்து அவர்கள் கூறியதாவது: ‘அ’ முதல் ‘அக்கு(ஃ)’ வரை என்பது போல், காவல்துறையின் அனைத்து விவரங்களும் இந்த அருங்காட்சியகத்தில் உள்ளன. இதற்கு முன்னரே சில இடங்களில் காவலர் அருங்காட்சியகம் இருந்தாலும், நாட்டில் காவல் துறைக்கு என முழுமையாக அமைக்கப்பட்ட முதல் அருங்காட்சியகம் இதுதான். சிறிய ரக கைத்துப்பாக்கி முதல் பெரிய ரக இயந்திர துப்பாக்கி வரை இங்கு வைக்கப்பட்டுள்ளது.

சமிக்ஞை கைத்துப்பாக்கி, 380 டிகிரி சுழல் கைத்துப்பாக்கி, 380 டிகிரி ரூகல் சுழல் கைத்துப்பாக்கி, 9 மி.மீ நீள கைத்துப்பாக்கி, 450 டிகிரி தாம்சன் இயந்திரத் துப்பாக்கி, 9 மி.மீ கைப்பெட்டி இயந்திரத் கைத்துப்பாக்கி, 303 டிகிரி கத்தி முனை துப்பாக்கி, ஊசி முனை ஈட்டியுடன் கூடிய துப்பாக்கி, மஸ்கட் துப்பாக்கி, 7.62 மி.மீ சுய ஏற்றுதல் துப்பாக்கி, 7.62 மி.மீ ஏகே 47 ரக துப்பாக்கி, 5.56 மி.மீ இன்சாஸ் ரக துப்பாக்கி, 7.62 மி.மீ எஸ்.எல்.ஆர் ரக இரவில் பயன்படுத்தும் துப்பாக்கி, காற்றழுத்த விசை துப்பாக்கி, 9 மி.மீ இயந்திர கைத்துப்பாக்கி உள்ளிட்ட காவல்துறையிடம் உள்ள அனைத்து துப்பாக்கி வகைகள் இங்கு பார்வைக்காக வைக்கப்பட்டு உள்ளன.

மலையூர் மம்பட்டியானிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், சந்தன கடத்தல் வீரப்பனிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், விடுதலைப் புலிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்ட துப்பாக்கிகள், ராக்கெட் ஏவுகணை, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளன.

17.11.1980-ம்ஆண்டு அப்போதைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரால், காவல்துறைக்கு வழங்கப்பட்ட வெள்ளி வாள் , 1960-ம் ஆண்டு குற்றவாளிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கள்ள நோட்டு அச்சடிப்பு இயந்திரம், காவல்துறையின் 2-ம் நிலைக்காவலர் முதல் காவல்துறை தலைவர் வரையிலானவர்களுக்கு பயன்படுத்தப்படும் அடையாளக் குறியீடுகள், வெடிகுண்டு தடுப்புப் பிரிவு காவல்துறையினர் பயன்படுத்தும் உபகரணங்கள், கைரேகை நிபுணர் பிரிவு போலீஸார் பயன்படுத்தும் உபகரணங்கள், அந்தக் காலம் முதல் தற்போது வரை பயன்படுத்தப்பட்ட காவல்துறையினரின் உடைகள், சாலை விதிகள் குறித்து எடுத்துரைக்க மினி திரையரங்கு போன்றவை இங்கு உள்ளன.


ஏவுகணைகளுடன கம்பீரமாக காட்சியளிக்கும் காவலர் அருங்காட்சியகத்தின் முகப்புப் பகுதி.

இந்த கட்டிடத்துக்கு வெளியே வளாகத்தில் கார்கில் போரில் பயன்படுத்தப்பட்ட பீரங்கி, தாம்பரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட விமானம், கடலோரக் காவல் படையால் வழங்கப்பட்ட கப்பல், ஏவுகணைகள் போன்றவையும் வைக்கப்பட்டுள்ளன. இந்த அருங்காட்சியகத்துக்கு வந்து செல்பவர்கள் பிரம்மித்து போகும் அளவுக்கு இங்கு பார்வைக் காக ஏராளமான பொருட்கள் உள்ளன’’ என்றனர்.

திங்கள்கிழமை விடுமுறை

‘‘திங்கள்கிழமை விடுமுறை, வாரத்தின் மற்ற நாட்களில் காலை 10 மணி முதல் 1 மணி வரையும், மதியம் 2 மணி முதல் 4 மணி வரையும் இந்த அருங்காட்சியகம் செயல்படும். நுழைவு கட்டணமாக குழந்தைகளுக்கு ரூ.25, பெரியவர்களுக்கு ரூ.50, வெளிநாட்டினருக்கு ரூ.100 வசூலிக்கப்படுகிறது. தினசரி நூற்றுக்கும் மேற்பட்டோர் வந்து பார்வையிட்டுச் செல்கின்றனர். இதுவரை 40 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பார்வையிட்டுச் சென்றுள்ளனர். வார இறுதி நாட்களில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும். இந்த அருங்காட்சியகம் அமைக்க அப்போதைய மாநகர காவல் ஆணையர்கள் அமல்ராஜ், பெரியய்யா ஆகியோர் உறுதுணையாக இருந்தனர்.

இதை தொடர்ந்து சிறப்பாக பராமரிக்க தற்போதைய மாநகர காவல் ஆணையர் சுமித்சரண் மிகவும் உறுதுணையாக உள்ளார்’’ என்றனர்.

- டி.ஜி.ரகுபதி | படங்கள்: ஜெ.மனோகரன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x