Published : 20 Nov 2019 10:44 AM
Last Updated : 20 Nov 2019 10:44 AM

ஜார்க்கண்ட் மாணவி தற்கொலையால் மாணவிகள் உள்ளிருப்புப் போராட்டம்: திருச்சி கல்லூரியில் டிச.2-ல் கல்வி அதிகாரிகள் பேச்சுவார்த்தை - அதிக கெடுபிடி காட்டுவதாக விடுதி நிர்வாகத்தின் மீது குற்றச்சாட்டு

திருச்சி கே.கே.நகர் அருகேயுள்ள கே.சாத்தனூரில் அய்மான் கல்வி மற்றும் நலச் சங்கம் சார்பில் அய்மான் மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. முஸ்லிம் உள்ளிட்ட சிறுபான்மையினர், பிற்படுத்தப்பட்ட மாணவிகளின் உயர் கல்விக்காக ஏற்படுத்தப்பட்ட இக்கல்லூரியில் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளைச் சேர்ந்த 1,300 மாணவிகள் படிக்கின்றனர். இவர்களில், 630 பேர் அங்குள்ள விடுதியில் தங்கிப் படிக்கின்றனர்.

இந்நிலையில், இங்கு விடுதியில் தங்கி பி.எஸ்சி (ஊட்டச்சத்து மற்றும் உணவுமுறை) முதலாமாண்டு படித்து வந்த ஜார்க்கண்ட் மாநிலம் ராஞ்சி அருகேயுள்ள காமர் பகுதியைச் சேர்ந்த முகமது ஹைதர் அலி என்பவரின் மகள் ஷபாரா பர்வீன்(18), கடந்த 13-ம் தேதி விடுதியில் மின்விசிறியில், சுடிதார் துப்பட்டாவால் தூக்குப் போட்டுக்கொண்டார். சக மாணவிகள் மீட்டு திருச்சி அரசு மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த மருத்துவர்கள், அவர் ஏற்கெனவே இறந்துவிட்டதாகத் தெரிவித்தனர்.

தகவலறிந்த கே.கே.நகர் போலீஸார் கல்லூரிக்குச் சென்று விசாரித்தனர். பின்னர் விடுதி வார்டன் ஜெசிமா(31) அளித்த புகாரின்பேரில், 174-வது பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்தனர்.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் இந்தி மொழிவழிக் கல்வியில் படித்து அதிக மதிப்பெண்கள் பெற்ற ஷபாரா பர்வீனால், ஆங்கில வழிக்கல்வியில் படிக்க முடியாதது குறித்து தோழிகளிடம் கூறி வந்த நிலையில் அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டதாக கூறப்பட்டிருந்தது. இதையடுத்து, ஷபாரா பர்வீன் உடல் திருச்சி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்நிலையில், விடுதி நிர்வாகத்தின் கெடுபிடியால்தான் ஷபாரா பர்வீன் தற்கொலை செய்து கொண்டதாகவும், சம்பந்தப்பட்ட வார்டன்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் வலியுறுத்தி பி.எஸ்சி 2-ம் ஆண்டு பயிலும் மாணவிகள் நேற்று முன்தினம் கல்லூரி வளாகத்தில் உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவலறிந்த கல்லூரி நிர்வாகத்தினரும், கே.கே.நகர் போலீஸாரும் மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தியததால் போராட்டம் முடிவுக்கு வந்தது.

இதுகுறித்து பெயர் தெரிவிக்க விரும்பாத மாணவிகள் கூறியபோது, ‘‘தகுதியுடைய வார்டன்கள் இல்லை. கடும் கட்டுப்பாடுகளை மீறும் மாணவிகளிடம் அதிக கெடுபிடி காட்டுகின்றனர். இதுபோன்ற ஒரு பிரச்சினையின் காரணமாகவே ஷபாரா பர்வீன் தற்கொலை செய்துகொண்டார். ஆங்கிலம் தெரியாததால் தற்கொலை செய்துகொண்டதாக கூறுவது தவறு. சென்னை ஐ.ஐ.டி-யில் 9-ம் தேதி தற்கொலை செய்துகொண்ட பாத்திமா லத்தீபும் வெளிமாநில முஸ்லிம் மாணவிதான். அவருக்காக குரல் கொடுக்கும் அரசியல் தலைவர்கள், மாணவர் அமைப்புகள் என யாரும் ஷபாரா பர்வீன் மரணம் குறித்து கண்டுகொள்ளவில்லை. போராடும் எங்களின் இன்டர்னல் மதிப்பெண்ணில் கைவைத்துவிடுவதாக அச்சுறுத்துகின்றனர்" என்றனர்.

இதுகுறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது அவர்கள் கூறியதாவது:மாணவி ஷபாரா பர்வீன், விடுதி நிர்வாகத்துக்கு தெரியாமல் டேப்லட் பி.சி பயன்படுத்தியது குறித்து விடுதி வார்டன் கண்டித்ததுடன், இதுகுறித்து பெற்றோரிடம் கூறுவேன் என தெரிவித்தால் பயத்தில் அந்த மாணவி தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

மாணவியின் பெற்றோர் புகார் எதுவும் தெரிவிக்கவில்லை. விடுதி மாணவிகள் போராட்டம் நடத்தியதால் விடுதி நிர்வாகம் உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையில் வரும் டிசம்பர் மாதம் 2-ம் தேதி உயர் கல்வித் துறை அதிகாரிகள் பங்கேற்கும் பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு போலீஸார் கூறினர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x