பத்திரிகையாளரை தாக்கி கொலை மிரட்டல்: வி.சி. கட்சியினர் 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு

குணசேகரன்
குணசேகரன்
Updated on
1 min read

விடுதலைச் சிறுத்தைகள் கட்சி நிறுவனர் திருமாவளவன் குறித்து முகநூலில் வந்த தகவலை மறுபதிவிட்ட பத்திரிகையாளரை சரமாரியாக தாக்கிய அக்கட்சியைச் சேர்ந்த 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: ராணிப்பேட்டை அடுத்த அக்ராவரம், பிள்ளையார் கோயில் தெருவைச் சேர்ந்தவர் குணசேகரன் (54). 2007-ம் ஆண்டு முதல் மாத இதழ் ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில், சில நாட்களுக்கு முன்பு தனது முகநூல் பக்கத்தை குணசேகரன் பார்த்துக்கொண்டு இருந்தபோது, விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் குறித்து வந்த தகவலை குணசேகரன், ‘லைக்’ செய்து அதை மறுபதிவு செய்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், கடந்த 16-ம் தேதி காலை விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்டச் செயலாளராக பொறுப்பு வகிக்கும் ராணிப்பேட்டை காரை பகுதியைச் சேர்ந்த குண்டா (எ) சார்லஸ் என்பவர் குணசேகரனுக்கு போன் செய்து 5 நிமிடம் தனியாக பேச வேண்டும் எனக் கூறி ராணிப்பேட்டையில் உள்ள பயணியர் விடுதி பகுதிக்கு வரும்படி கூறியுள்ளார்.

சரமாரி தாக்குதல்இதையடுத்து, அங்கு சென்ற குணசேகரனை சார்லஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஒன்று சேர்ந்து முகநூல் பக்கத்தில் எங்கள் தலைவரை பற்றி அவதூறு பரப்புகிறாயா? எனக் கேட்டு அவரை சரமாரியாக தாக்கினர். இனி இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டால் கடும் விளைவுகளை சந்திக்க நேரிடும் என கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

பரஸ்பரம் புகார்இதுகுறித்து ராணிப்பேட்டை காவல் நிலையத்தில் குணசேகரன் புகார் அளித்தார். அதன்பேரில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த சார்லஸ், சந்திரன், தமிழ், பார்த்தீபன், சூர்யா, ராஜா ஆகிய 6 பேர் மீது 4 பிரிவுகளின் கீழ் ராணிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதேபோல், சார்லஸ் கொடுத்த புகாரின் பேரில் குணசேகரன் மீது 4 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in