

தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர்கள், இணைப் பேராசிரியர்கள் நியமனத்தில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த புகாரைத் தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் ச.முத்துக்குமார் உட்பட 4 பேர் மீது கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் 10 பேராசிரியர்கள், 11 இணைப் பேராசிரியர்கள் என மொத்தம் 21 பேர், 2017 மே மாதத்தில் நியமனம் செய்யப்பட்டனர். இந்த நியமனத்தில் முறைகேடுகள், விதிமீறல்கள் நடந்ததாக புகார்கள் எழுந்தன.
இதுதொடர்பாக உயர் நீதிமன்ற மதுரை கிளையில் முன்னாள் பேராசிரியர் முருகேசன், சமூக ஆர்வலர் நெடுஞ்செழியன் ஆகியோர் வழக்கு தொடுத்தனர். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், இதுகுறித்து விசாரணை நடத்துமாறு கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவுக்கு உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தினர். தேர்ந்தெடுக்கப்பட்ட 21 பேரும் தகுதியற்றவர்கள் என விசாரணையில் தெரியவந்தது.
இதைத் தொடர்ந்து, முன்னாள் துணைவேந்தர் க.பாஸ்கரன், முன்னாள் பதிவாளர் ச.முத்துக்குமார், முன்னாள் பதிவாளரின் நேர்முக உதவியாளர் ஜி.சக்தி சரவணன், தொலைநிலைக் கல்வி முன்னாள் இயக்குநர் என்.பாஸ்கரன் ஆகியோர் மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் கீழ் 120(பி) (குற்றச் சதி), 409 (நம்பிக்கை மோசடி), 420 (ஏமாற்றி நேர்மையின்றி பொருளைப் பெறுதல் அல்லது கொடுக்கும்படி செய்தல்), 467 (போலி ஆவணங்கள் தயாரித்தல்), 471 (பொய்யாகப் புனையப்பட்டு உண்மையானதாக உபயோகம் செய்தல்), ஊழல் தடுப்புச் சட்டம் பிரிவு 7-ன் கீழ் (அரசு ஊழியர் சட்டவிரோதமாகப் பணம் பெறுதல்), 13(1) (சி), (13(1)(டி), 13(2) ஆகிய பிரிவுகளில் தஞ்சாவூர் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் கடந்த 14-ம் தேதி வழக்கு பதிவு செய்தார்.
இந்நிலையில், இந்த முதல் தகவல் அறிக்கை கும்பகோணத்தில் உள்ள சிறப்பு நீதிமன்றம் மற்றும் தலைமைக் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் நேற்று தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குற்றம் சாட்டப்பட்டவர்களிடம் கண்காணிப்பு மற்றும் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்ததாவது: 21 பேரில் பலருக்கு போதிய முதுகலை ஆசிரியர் அனுபவம் இல்லை. பலர் முனைவர் பட்ட மாணவர்களுக்கு வழிகாட்டுநராகச் செயல்படவில்லை. மேலும், பல்கலைக்கழக நிதி நல்கைக் குழு (யுஜிசி) விதிகள் கடைபிடிக்கப்படவில்லை. நேர்முகத் தேர்வில் தேர்வுக் குழு உறுப்பினர்கள் அவர்களுக்கு அதிகப்படியான மதிப்பெண்களை வழங்கியுள்ளனர். நேர்முகத் தேர்வுக்கு முன்பாக 10 பேரிடம் தலா ரூ.15 லட்சம் முதல் ரூ.40 லட்சம் வரை பணம் பெற முயற்சி நடந்துள்ளது.
இதேபோல, தமிழ்ப் பல்கலைக்கழக விதிகளை மீறி 70 ஆசிரியரல்லாத பணியிடங்களில் தினக்கூலி அடிப்படையில் நியமனம் செய்யப்பட்டுள்ளது. இவர்களுக்கான ஊதியம் அரசு நிதியுதவி மற்றும் தமிழ்ப் பல்கலைக்கழகத் தொலைநிலைக் கல்வி வருவாயில் இருந்து வழங்கப்படுகிறது. தற்காலிக அடிப்படையில் தேர்வு செய்யப்பட்ட இவர்கள் தொடர்ந்து பணியாற்றி வருகின்றனர். இவர்களுக்கான ஊதியம் வழங்கப்படுவதால், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் நிதி நல்கையில் இழப்பு ஏற்படுகிறது என்பன போன்ற விவரங்கள் விசாரணையில் தெரியவந்ததாக போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.