Published : 20 Nov 2019 09:59 AM
Last Updated : 20 Nov 2019 09:59 AM

உலக மீனவர் தினம்: தமிழக மீனவர்களுக்கு ஏதுவான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்; ஜி.கே.வாசன்

ஜி.கே.வாசன்: கோப்புப்படம்

சென்னை

தமிழக மீனவர்கள் மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக இந்திய அரசும், இலங்கை அரசும் முறையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என, தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பாக ஜி.கே.வாசன் இன்று (நவ.20) வெளியிட்ட அறிக்கையில், "உலக மீனவர் தினம் நவம்பர் 21 ஆம் தேதி கொண்டாடப்படுவது மகிழ்ச்சிக்குரியது. மீன்பிடித் தொழில் செய்ய கடலுக்கு செல்லும் மீனவர்களின் வாழ்வு உயர வேண்டும். ஆனால் இந்திய நாட்டு மீனவர்கள் அண்டை நாட்டு கடற்படையினாரல் கைது செய்யப்படுவதும், சிறையில் அடைக்கப்படுவதும், துன்புறுத்தப்படுவதும் நடந்து கொண்டு தான் இருக்கின்றது. இந்திய மீனவர்கள் உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் மீன்பிடித் தொழிலில் ஈடுபடும் போது அவர்களுக்கு உரிய பாதுகாப்பு கிடைக்கக்கூடிய நடவடிக்கைகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும்.

குறிப்பாக தமிழக மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது இயற்கையால் பாதிக்கப்படுவதை ஏற்றுக்கொள்வது ஒரு புறம் என்றால் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படுவதை தான் மீனவர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மீனவர்கள் மழை, வெயில், புயல் ஆகிய காலங்களில் உயிரையும், உடைமைகளையும் பணயம் வைத்து கடலுக்குச் சென்று கடலில் கிடைக்கின்ற மீன் போன்ற உணவுப் பொருட்களை பிடித்து கரைக்கு கொண்டு வருவது கடினமான பணியாகும். அப்படி கொண்டு வரும் கடல் உணவுப் பொருட்களை பொது மக்களுக்கு விற்று பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.

மேலும் மீனவர்கள் காலம் காலமாக மீன்பிடித்தொழில் மூலமாக அரசுக்கு பல கோடி மதிப்பிலான அந்நிய செலாவணியை ஈட்டித் தருகிறார்கள். ஆனாலும் மீனவர்களின் வாழ்வாதாரம் உயர்ந்த பாடில்லை. இதற்கு காரணம் மீனவர்களின் கோரிக்கைகள் இன்னும் முழுமையாக நிறைவேற்றப்படாதது தான்.

குறிப்பாக கடல் மாசடைந்து மீன்வளம் குன்றி மீன்பிடித் தொழில் நலிவடைந்து போய்க்கொண்டிருப்பதை தடுக்க வேண்டிய அனைத்து முயற்சிகளிலும் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட வேண்டும். நம் நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சிக்கும் மீன்பிடித் தொழிலின் பங்கு மிக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கின்றது.

மத்திய, மாநில அரசுகள் மீனவ சமுதாய மக்களின் பிரதிநிதிகள் கொண்ட குழுவை அழைத்துப் பேசி தொழில் சார்ந்த பிரச்சினைகளை கேட்டறிந்து மீனவர்களுக்கென்று தனி அமைச்சகம் அமைக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு நியாயமான கோரிக்கைகளை காலம் தாழ்த்தாமல் நிறைவேற்றினால் அவர்கள் தொழிலில் நிம்மதியாக ஈடுபட்டு வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்வார்கள்.

எனவே இந்திய அரசு இலங்கையில் புதிதாக பொறுப்பேற்றுள்ள அதிபரிடம் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் இலங்கை கடற்படையால் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும், இலங்கையால் ஏற்கெனவே பறிமுதல் செய்யப்பட்ட விசைப்படகுகளை விடுவிப்பதற்கும் அல்லது நஷ்ட ஈடு தருவதற்கும், கச்சத்தீவில் தமிழக மீனவர்கள் மீன்பிடிப்பதற்கும், இனிமேலும் இலங்கை அரசால் தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழில் பாதிக்கப்படாமல் இருப்பதற்கும் உறுதியான பேச்சுவார்த்தை நடத்தி தமிழக மீனவர்களின் மீன்பிடித் தொழிலுக்கு உதவிக்கரமாக, பாதுகாப்பு அரணாக விளங்க வேண்டும்.

இந்திய மீனவர்களும், இலங்கை மீனவர்களும் மீன்பிடி உறவில் இணக்கமாக இருந்து மீன்பிடித் தொழில் செய்வதற்கு ஏதுவாக இந்திய அரசும், இலங்கை அரசும் சரியான, முறையான நடவடிக்கைகளை எடுத்து மீன்பிடித் தொழில் சிறந்து, வளர்ந்து, உயர்ந்து மீனவர்களின் வாழ்வு மேம்பட வேண்டும் என்று தமாகா சார்பில் உலக மீனவர் தின நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்," என ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x