Published : 20 Nov 2019 09:51 AM
Last Updated : 20 Nov 2019 09:51 AM

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழி தாக்கல் செய்த மனு தள்ளுபடி: உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய முடிவு

தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழிஎம்.பி. தாக்கல் செய்த மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து தீர்ப்பளித்துள்ளது. தீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யப்போவதாக கனிமொழி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி மக்களவைத் தொகுதியில் திமுக வேட்பாளர் கனிமொழி வெற்றி பெற்றது செல்லாது என அறிவிக்கக் கோரி அத்தொகுதி வாக்காளரான ஏ.சந்தானகுமார் என்பவர் உயர் நீதிமன்றத்தில் தேர்தல் வழக்கு தொடர்ந்திருந்தார். இந்த வழக்கு நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம் முன்பாக நிலுவையில் உள்ளது.

இதற்கிடையே, தனக்கு எதிரான தேர்தல் வழக்கை நிராகரிக்கக் கோரி கனிமொழிஎம்.பி. தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. ‘எனது கணவர் சிங்கப்பூர் பிரஜைஎன்பதால் அவருக்கு இந்தியாவில்பான் கார்டு இல்லை. அதனால் அவருடைய வருமான விவரங்களை எனது தேர்தல் வேட்புமனுவில் குறிப்பிட வேண்டிய அவசியமில்லை.

இதேபோல, வாக்காளரான ஏ.சந்தானகுமார் எனக்கு எதிராக தொடர்ந்த தேர்தல் வழக்கில் எந்த முகாந்திரமும் இல்லை என்பதால் அதை நிராகரிக்க வேண்டும்’ என மனுவில் கனிமொழி கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், வழக்கின் தீர்ப்பை தேதிகுறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்த வழக்கில், நேற்று தீர்ப்பளித்தார்.

அவர் பிறப்பித்துள்ள தீர்ப்பில், ‘‘தூத்துக்குடி எம்.பி.யான கனிமொழிக்கு எதிராக வாக்காளர் சந்தானகுமார் தொடர்ந்த வழக்கில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விசாரணையின் இறுதியில்தான் முடிவுசெய்ய முடியும். அதற்கு முன்பாக அந்த வழக்கை நிராகரிக்க வேண்டும் என கனிமொழி தரப்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவை ஏற்க முடியாது என்பதால் மனுவை தள்ளுபடி செய்கிறேன்’’ என கூறியுள்ளார்.

இந்நிலையில், ‘‘உயர் நீதிமன்றதீர்ப்பை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்யவுள்ளோம்’’ என கனிமொழி தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன் தெரிவித்து உள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x