

உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் விருப்ப மனு தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் வரும் 27-ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்படாத நிலையில் அதிமுக, திமுக, பாஜக, தேமுதிக ஆகிய கட்சிகள் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்துவிருப்ப மனுக்களை பெற்று வருகின்றன. வரும் 21-ம் தேதி (நாளை)முதல் விருப்ப மனுக்களை அளிக்கலாம் என்று காங்கிரஸ் அறிவித்துள்ளது.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு
தேர்தல் தேதி எந்த நேரத்திலும் அறிவிக்கப்படலாம் என கூறப்படும் நிலையில், இதுதொடர்பாக உச்சநீதிமன்றத்தில் நடந்து வரும் வழக்கில், டிசம்பர் முதல் அல்லது 2-வது வாரத்தில் தேர்தல் அட்டவணையை வெளியிட தயாராக இருப்பதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட மாவட்டங்களில் தொகுதி மறுவரையறை செய்யப்பட்ட பிறகே உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் திமுக தெரிவித்துள்ளது. இதனால் தேர்தல் மேலும் தள்ளிப் போகலாம் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் விருப்ப மனுஅளிப்பதற்கான கால அவகாசத்தை திமுக நீட்டித்துள்ளது.
அன்பழகன் அறிக்கை
இதுகுறித்து கட்சியின் பொதுச்செயலாளர் க.அன்பழகன் நேற்று வெளியிட்ட அறிக்கையில், “நடைபெறவுள்ள உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட விரும்பும் திமுகவினர் மாவட்ட அலுவலகங்களில் இருந்து விண்ணப்ப படிவங்களைப் பெற்று, விரும்பும் பொறுப்பு, சுய விவரங்களுடன் நவம்பர் 14 முதல் 20-ம் தேதி வரைதாக்கல் செய்யலாம் என்று கடந்த 11-ம் தேதி அறிவிக்கப்பட்டிருந்தது. மாவட்டச் செயலாளர்களின் வேண்டுகோளின்படி விருப்ப மனு அளிப்பதற்கான கால அவகாசம் வரும் 27-ம் தேதி (புதன்கிழமை) வரை நீட்டிக்கப்படுகிறது” என்று தெரிவித்துள்ளார்.