பள்ளி மாணவர்களிடையே நிதி குறித்து விழிப்புணர்வு: நிதிசார்ந்த கல்வியறிவு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த நடவடிக்கை - அனைத்து மாநிலங்களுக்கும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தல்
பள்ளி மாணவர்களிடையே நிதிசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, வரும் கல்வி ஆண்டுக்குள் நிதிசார்ந்த கல்வியறிவு குறித்து அவர்களது பாடத்திட்டத்தில் சேர்த்து முழு அளவில் செயல்படுத்த வேண்டும் என தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளையும் ரிசர்வ் வங்கி அறிவுறுத்தியுள்ளது.
பொதுமக்களிடையே நிதி சார்ந்த போதிய விழிப்புணர்வு இல்லாததால், நிதி மோசடி தொடர்பான குற்றங்கள் அதிகரிப்பதோடு, அது நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே, பொதுமக்களிடையே நிதிசார்ந்த விழிப்புணர்வை ஏற்படுத்த மத்திய ரிசர்வ் வங்கி பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
இதன் ஒருபகுதியாக, பள்ளிமாணவர்களிடையே நிதிசார்ந்தவிழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக, அவர்களது பாடத் திட்டத்திலேயே நிதிசார்ந்த கல்வியறிவு ஏற்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதுகுறித்து, ரிசர்வ் வங்கி அதிகாரிகள் கூறியதாவது:மத்திய அரசு கறுப்புப் பணத்தை ஒழிப்பதற்காக, பணமதிப்பு நீக்க அறிவிப்பை வெளியிட்டது. அதன்பிறகு, ரொக்கப் பணப் பரிவர்த்தனைகளுக்கு பதிலாக, டிஜிட்டல் பேமென்ட் எனப்படும் மின்னணுப் பணப் பரிவர்த்தனைகளை ஊக்குவித்து வருகிறது. இதற்காக, ரிசர்வ் வங்கியும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இதன்படி, பொதுமக்களிடையே மின்னணுப் பணப் பரிவர்த்தனைகள் மேற்கொள்வது குறித்து, வங்கிகள் மூலம் விழிப்புணர்வு கூட்டங்கள், கருத்தரங்குகளை நடத்தி வருகிறது. குறிப்பாக, நிதிசார்ந்தமோசடிகள் குறித்து கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்ததீவிர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, பள்ளிமாணவர்கள் மத்தியிலும் விழிப்புணர்வு ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக, அவர்கள் பாடத் திட்டத்திலேயே நிதிசார்ந்த கல்வியறிவு குறித்துசேர்க்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, தமிழகம் உள்ளிட்ட அனைத்து மாநில கல்வித் துறைக்கும் ரிசர்வ் வங்கிசார்பில் கடிதம் அனுப்பப்பட் டுள்ளது.
இதன்படி, 6 முதல் 10-ம் வகுப்பு வரையிலான பாடத் திட்டத்தில் நிதிசார்ந்த கல்வியறிவு திட்டம் சேர்க்கப்படும். ஆனால், ஒரு சில மாநிலங்கள் மட்டுமே தங்களது பாடத் திட்டத்தில் நிதிசார்ந்த கல்வியறிவு பாடத்திட்டத்தை சேர்த்துள்ளன. தமிழகம் உள்ளிட்ட சிலமாநிலங்களில் இத்திட்டம் இன்னும்முழுமையாக அமல்படுத்தப்படவில்லை.
எனவே, இத்திட்டத்தை முழு அளவில் செயல்படுத்தும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக, அடுத்த கல்வி ஆண்டுக்குள் இத்திட்டத்தை முழு அளவில்செயல்படுத்தும்படி தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்மூலம், பள்ளிமாணவர்கள் தாங்கள் கல்வி பயிலும் காலத்திலேயே, அவர்களுக்கு நிதிசார்ந்த போதிய அறிவு பெறுவர். மேலும், அவர்கள் வளர்ந்துஎதிர்காலத்தில் சம்பாதிக்கும்போது, அவர்களது தனிப்பட்ட பொருளாதார நிலை உயர்வதோடு, அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலையும் மேம்படும்.
