Published : 20 Nov 2019 08:46 AM
Last Updated : 20 Nov 2019 08:46 AM

தமிழக உள்ளாட்சித் தேர்தலில் உச்ச நீதிமன்ற வழிமுறைகளை பின்பற்ற கோரிக்கை: தேர்தல் ஆணையர், ஆட்சியர்களுக்கு ஆர்.எஸ்.பாரதி மனு

உள்ளாட்சித் தேர்தலில் உச்சநீதிமன்றம் பிறப்பித்த வழிமுறைகளை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி வலி யுறுத்தியுள்ளார்.

தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த உத்தரவிடக் கோரி தொடரப்பட்ட வழக்கை நேற்று முன்தினம் விசாரித்த உச்ச நீதிமன்றம், அனைத்து சட்ட நடைமுறைகளையும் முடித்துடிசம்பர் 13-ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தல் அறிவிப்பா ணையை வெளியிட வேண்டும் என்று உத்தரவிட்டது.

இந்நிலையில் மாநிலத் தேர்தல் ஆணையர், செயலாளர், தமிழ்நாடு உள்ளாட்சி மன்ற மறுவரையறை ஆணையத்தின் தலைவர், உறுப்பினர் செயலர், 37 மாவட்டங்களின் ஆட்சியர் களுக்கு திமுக அமைப்புச் செயலாளரும் மாநிலங்களவை உறுப்பினருமான ஆர்.எஸ்.பாரதி மனுஅளித்துள்ளார்.

அதில் கூறப்பட்டிருப்பதாவது:உள்ளாட்சித் தேர்தலை சட்டவிதிகளைப் பின்பற்றி முறையாக நடத்த வேண்டும் என்று கடந்த 12-ம் தேதி மாநில தலைமை தேர்தல் ஆணையரிடம் திமுக சார்பில் மனு அளித்துள்ளோம். உள்ளாட்சி மன்றங்களின் வார்டுகளை மக்கள்தொகை, இடஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் மறுவரையறை செய்ய உள்ளாட்சி மன்றங்களின் மறுவரையறைஆணையம் அமைக்கப்பட்டது. ஆனாலும், மறுவரையறை சட்டவிதிகளின்படி செய்யப்படவில்லை.

புதிய மாவட்டங்கள்

மறுவரையறை தொடர்பாகதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகளின் கருத்துகள் கேட்கப்படவில்லை. தமிழகத்தில் விழுப்புரம்,காஞ்சிபுரம், வேலூர், திருநெல்வேலி ஆகிய 4 மாவட்டங்கள் பிரிக்கப்பட்டு 9 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த மாவட்டங்களிலும் மாநகராட்சி, நகராட்சி, மாவட்ட ஊராட்சி, ஊராட்சி ஒன்றிய வார்டுகள் மறுவரையறை செய்யப்பட வேண்டும். எஸ்சி, எஸ்டி மற்றும் பெண்களுக்கான இடஒதுக்கீடு முழுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். இதைப் பின்பற்றி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று திமுக சார்பில் உச்ச நீதிமன்றத்தில் வலியுறுத்தினோம். அதை ஏற்று அனைத்து சட்ட நடைமுறைகளையும் பின்பற்ற வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அதன்படி, 37 மாவட்டங்களிலும் உள்ளாட்சி மன்றங்களின் தொகுதிகளை மறுவரையறை செய்யவேண்டும். மேலும், இதுதொடர்பாக அரசியல் கட்சிகளின் கருத்துகளை கேட்க வேண்டும். உச்ச நீதிமன்றம் பிறப்பித்துள்ள வழிமுறைகளை தேர்தல் ஆணையம் முழுமையாக நடைமுறைப்படுத்தி உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும்.

இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x