

ஸ்ரீபெரும்புதூர் - தாம்பரம், பெரும்புதூர் - ஓரகடம் சாலைகள் சந்திப்பில் மேம்பாலமும் சந்தைவேலூர் பகுதியில் சுரங்க நடைபாதையும் அமைக்கப்படும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி தெரிவித்துள்ளார்.
சென்னை - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க ஸ்ரீபெரும்புதூர் அருகில் ஒரு தளப்பிரிவு மேம்பாலமும் இரண்டு சுரங்க நடைபாதைகளும் அமைத்து தருமாறு கடந்த ஜூலை 16-ம் தேதி நிதின் கட்கரிக்கு திமுக முதன்மைச் செயலாளரும் ஸ்ரீபெரும்புதூர் மக்களவைத் தொகுதி உறுப்பினருமான டி.ஆர்.பாலு கடிதம் எழுதியிருந்தார்.
இதைத்தொடர்ந்து நிதின் கட்கரி அனுப்பிய பதில் கடிதத்தில், "ஸ்ரீபெரும்புதூர் - கவரப்பேட்டை பகுதியில் நடைபெற்று வரும் 6 வழிச்சாலை பணிகளின் ஒரு பகுதியாக ஸ்ரீபெரும்புதூர்- தாம்பரம், ஸ்ரீபெரும்புதூர் - ஓரகடம் சாலைகள் சந்திப்பில் தளப்பிரிவு மேம்பாலம் அமையவுள்ளது. சந்தைவேலூர் பகுதியில் சுரங்கநடைபாதையும் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.
ஸ்ரீபெரும்புதூர் - மதுரவாயல் பகுதி நெடுஞ்சாலையை வலுப்படுத்தும் பணிகள் நிறைவேற்றப்படும்போது தண்டலம் கிராம குறுக்குச்சாலை பணிகளும் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும்" என்றும் நிதின் கட்கரி எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக டி.ஆர்.பாலு நேற்று வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளார்.