சென்னை ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை: தந்தைக்கு கல்லீரலை தானம் கொடுத்த மகள் - டாக்டர்கள் குழுவுக்கு முதல்வர் பாராட்டு

சென்னை ஜெம் மருத்துவமனையில் அறுவை சிகிச்சை: தந்தைக்கு கல்லீரலை தானம் கொடுத்த மகள் - டாக்டர்கள் குழுவுக்கு முதல்வர் பாராட்டு
Updated on
1 min read

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த தந்தைக்கு தனது ஒரு பகுதி கல்லீரலை மகள் தானமாக வழங்கினார். இதைத் தொடர்ந்து சென்னை ஜெம் மருத்துவமனையில் கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை நடைபெற்றது.

புதுச்சேரியைச் சேர்ந்தவர் முருகன்(48). கல்லீரல் செயலிழந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தவர்களிடம் கிடைக்கும் கல்லீரலுக்காகக் காத்திருந்தார். உடல்நிலை மிகவும் மோசமடைந்ததால், அவருக்கு உடனடியாக கல்லீரல் மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டது. சென்னை ஜெம் மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த அவருக்கு, அவரது 19 வயது மகள் நிவேதா தனது ஒரு பகுதி கல்லீரலை தானம் கொடுக்க முன்வந்தார்.

இதையடுத்து, டாக்டர்கள் குழுவினர் நுண்துளை அறுவை சிகிச்சை (லேப்ரோஸ்கோப்பி) மூலம் மகளிடம் இருந்து ஒரு பகுதி கல்லீரலை பிரித்தெடுத்து, தந்தைக்கு வெற்றிகரமாக பொருத்தினர். தற்போது இருவரும் நலமாக உள்ளனர்.

25 சதவீதம் கட்டணம் குறைப்பு

சென்னையில் முதல்முறையாக ஜெம் மருத்துவமனையில் இந்த அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. மேலும், இதற்கான ரூ.22 லட்சம் கட்டணத்தில் 25 சதவீதத்தை மருத்துவமனை குறைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இத்தகவலை அறிந்த முதல்வர் பழனிசாமி, ஜெம் மருத்துவமனைத் தலைவர் சி.பழனிவேலு, தலைமைச் செயல் அதிகாரி டாக்டர் அசோகன், இயக்குநர் செந்தில்நாதன் மற்றும் டாக்டர்கள் சாமிநாதன், விஜய் ஆனந்த், ஸ்ரீவத்சன் ஸ்ரீனிவாசன் ஆகியோரை தலைமைச் செயலகத்துக்கு நேற்று வரவழைத்து பாராட்டினார். அப்போது தந்தைக்கு கல்லீரல் தானம் வழங்கிய நிவேதா, தாய் சாந்தி, சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர், சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in