

கஜா புயலின்போது தமிழக அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையை முதல்வர் பழனிசாமியிடம், தேசிய பேரிடர் மேலாண்மை ஆணைய கூடுதல் செயலாளர் வழங்கினார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் தமிழகத்தை கஜா புயல் தாக்கியபோது தமிழக அரசால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்த ஆய்வறிக்கையின் நகலை தலைமை செயலகத்தில், முதல்வர் பழனிசாமியிடம் தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் கூடுதல் செயலாளர் திருப்புகழ் வழங்கினார்.
இந்த அறிக்கையில் கஜா புயலின்போது தமிழக அரசு மேற்கொண்ட முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், புயலால் ஏற்பட்ட பாதிப்புகள், அதற்காக அரசு, அரசுத் துறை சார்ந்தோர், சமூக ஆர்வலர்களின் பணிகள், இதன்மூலம் கற்றுக் கொண்ட பாடங்களால் எதிர்வரும் காலங்களில் எவ்வாறு பணியாற்ற வேண்டும் ஆகிய தலைப்புகளில் விரிவான விவரம் அளிக்கப்பட்டுள்ளன.
கடந்த பிப்ரவரி 12 முதல் 15-ம் தேதி வரை மாநில அரசு மற்றும் பாதிக்கப்பட்ட மாவட்டங்களின் நிர்வாகங்கள் ஆகியவற்றின் ஒத்துழைப்புடன் இந்த ஆய்வறிக்கை தொடர்பான ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. வருவாய் நிர்வாக ஆணையர் மற்றும் மின்வாரியம், கால்நடை பராமரிப்பு, வேளாண்மை, பொதுப்பணி, உள்ளாட்சித் துறை அலுவலர்களிடமும் விவரங்கள் சேகரிக்கப்பட்டன. பாதிக்கப்பட்ட மக்கள் மற்றும் அரசு சாரா நிறுவனங்களுடன் ஆலோசனைக் கூட்டங்களும் நடத்தப்பட்டன.
கஜா புயல் வருவதற்கு முன்னரே மக்களை பாதுகாப்பான இடத்துக்கு கொண்டு சென்றது, புயலால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு மூத்த ஐஏஎஸ அதிகாரிகளை நியமித்தது உள்ளிட்ட தமிழக அரசின் பல்வேறு நடவடிக்கைககள் குறித்து இந்த ஆய்வறிக்கையில் விளக்கப்பட்டுள்ளன.
இந்த அறிக்கை ஒப்படைப்பு நிகழ்வின்போது அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தலைமைச் செயலர் கே.சண்முகம், வருவாய்த்துறை செயலர் அதுல்ய மிஸ்ரா, வருவாய் நிர்வாக ஆணையர் ஜெ.ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் இருந்தனர்.