

தெலுங்கு கங்கை திட்ட ஒப்பந்தப்படி, ஆந்திர மாநில அரசு, சென்னை குடிநீர்தேவைக்காக கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு கடந்த செப்டம்பர் 25-ம் தேதி முதல் கிருஷ்ணா நீரை திறந்துவிட்டு வருகிறது. நேற்று காலை நிலவரப்படி விநாடிக்கு 3 ஆயிரம் கன அடி திறக்கப்பட்டு வருகிறது. அவ்வாறு திறக்கப்படும் கிருஷ்ணா நீரை, கடந்த ஒரு மாதத்துக்கு மேலாக ஆந்திர பகுதி விவசாயிகள், தங்கள் பகுதியில் உள்ள கிருஷ்ணா கால்வாய் மதகுகளை திறந்து, தங்கள் விவசாய நிலங்களுக்கு பயன்படுத்தி வருவதாக கூறப்படுகிறது. இதனால், தமிழக எல்லைக்கு விநாடிக்கு 56 கன அடி மட்டுமே நீர் வருகிறது.
கண்டலேறு அணையிலிருந்து, தமிழகத்துக்கு கடந்த செப்டம்பர் 25-ம் தேதிமுதல் நேற்று வரை 2.363 டி.எம்.சி அளவுக்கு பூண்டி ஏரிக்கு வந்துள்ளது.
மொத்தம் 3,231 மில்லியன் கன அடி கொள்ளளவு கொண்ட பூண்டி ஏரியில் நேற்று காலை நிலவரப்படி 1,225 மில்லியன் கன அடி நீர் இருப்புள்ளது. இதிலிருந்து, விநாடிக்கு 763 கன அடி நீர், இணைப்புக் கால்வாய்கள் மூலம் புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு அனுப்பப்பட்டு வருகிறது.