

தமிழக மேம்பாட்டிற்காக, வாய்ப்பு வந்தால் ரஜினியுடன் இணைந்து செயல்படுவேன் என மக்கள் நீதிமய்யம் நிறுவனர் கமல் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் டாக்டர் பட்டம் பெற்று தமிழகம் திரும்பிய கமல் விமான நிலையத்தில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:
“இந்தியாவிலேயே முதனமையான திறன் வளர்ப்புப் பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் கொடுத்தார்கள்.
அந்தப்பல்கலைக்கழகத்தில் படிக்காத ஒருவருக்கு கொடுக்கும் முதல் டாக்டர் பட்டம் எனக்குத்தான் கிடைத்துள்ளது. அதிலும் நான் பெருமைப்படும் விஷயம் ஒடிசா முதல்வர் கையால் அதை வாங்கியதுதான். திறமை வளர்ப்பு என்பது பற்றி நான் பலகாலமாக பேசிக்கொண்டிருக்கிறேன்.
அத்தகைய ஒரு பல்கலைக்கழகம், அதுவும் இந்தியாவிலேயே மிகவும் புகழ்ப்பெற்ற, மிகச்சிறந்த பல்கலைக்கழகம் எனக்கு டாக்டர் பட்டம் வழங்கியது மகிழ்ச்சிக்குரியது, பெருமைக்குரியது”.
இவ்வாறு அவர் தெரிவித்தார். பின்னர் செய்தியாளர்கள் கேள்விக்கு அவர் அளித்த பதில்:
அரசியலில் ரஜினியும் நீங்களும் இணையும் அதிசயம் நடக்குமா?
நாங்கள் இணைவதில் அதிசயம் எதுவும் இல்லை, ஏனென்றால் 44 ஆண்டுகாலமாக இணைந்துதான் இருக்கிறோம். இணையும் அவசியம் வந்தால் கண்டிப்பாக சொல்வோம். தற்போது வேலைதான் முக்கியம், இதைப்பேசுவது முக்கியம் அல்ல.
சேர்ந்து பயணிப்பது திரைத்துறையில் மட்டுமா? அல்லது அரசியலிலா?
சேர்ந்து பயணிப்பது என்பது, தமிழகத்தின் மேம்பாட்டுக்காக சேர்ந்து பயணிக்கவேண்டி வந்தால் பயணிப்போம்.
இருவரின் கொள்கையும் ஒத்துப்போகுமா?
அதெல்லாம் அப்புறம் பேசிக்கொள்வோம். இப்ப என்ன? நிறைய டைம் இருக்கு. அப்புறம் பார்க்கலாம்.
அதிபராக கோத்தபய ராஜபக்ச தேர்வு செய்யப்பட்டுள்ளார், இனிமேல் எப்படி இருக்கவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
நல்ல தலைவராக அவர் இருக்கவேண்டும் என நினைக்கவேண்டிய பட்சத்தில் நியாயமாக ஒரு ஆட்சியைக் கொடுக்கவேண்டியது அவரது கடமை. அங்கு அந்த நாட்டு மக்களுடைய தீர்ப்பு. இங்கேயும் அதே போன்று தீர்ப்புகள் பலமுறை வந்துள்ளது.
ஆகவே ஒருவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டால் அனைத்து தரப்பு மக்களையும் சமமாக பார்க்கவேண்டியது அவரது கடமை. அதை தனியாக யாரும் நினைவுப்படுத்த வேண்டியது இல்லை. அது நல்ல தலைவராக இருக்கும்பட்சத்தில் நினைவுப்படுத்த வேண்டியது இல்லை.
ஐஐடி பாத்திமா தற்கொலை விவகாரத்தில் கல்வி நிறுவனங்களுக்குள் மத, ஜாதி ரீதியான வேற்றுமை உள்ளதா?
நான் ஏற்கெனவே சொன்னதுதான். நாடெங்கும் ஏற்படும் விவாதம் இப்ப இந்த படிக்கும் கல்விக்கூடங்களுக்கும் நுழைந்துள்ளது என்பது வருத்தத்துக்குரியதுதான்.
ரஜினி முதல்வர் எடப்பாடி குறித்து கூறிய விமர்சனத்தை எப்படி பார்க்கிறீர்கள்?
அது விமர்சனம் இல்லையே, அதுதான் நிதர்சனம், உண்மை.
இவ்வாறு கமல் தெரிவித்தார்.