Published : 19 Nov 2019 07:01 PM
Last Updated : 19 Nov 2019 07:01 PM

முரசொலி அலுவலக இடம் விவகாரம்; ஆதாரத்துடன் வந்தும் புகாரளித்தவர் வாய்தா கேட்கிறார் : ஆர்.எஸ்.பாரதி பேட்டி

முரசொலி அலுவலகம் இடம் பஞ்சமி நிலம் என்று போகிற போக்கில் ஒருவர் சொன்னால் விசாரிக்கும் ஆணையம் பாஜக அலுவலகம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று சொன்னால் ஆணையம் விசாரிக்குமா? என திமுக சார்பில் ஆஜரான ஆர்.எஸ்.பாரதி கேள்வி எழுப்பினார்.

ஆணையம் முன் ஆஜரானப் பின் செய்தியாளர்களை சந்தித்த ஆர்.எஸ்.பாரதி கூறியதாவது:

“தாழ்த்தப்பட்டோர் ஆணையம் சார்பில் முரசொலி அலுவலகம் குறித்த புகாரில் எங்களை ஆஜராக ஆணையம் சொன்னதன்பேரில் இன்முகத்தோடு ஏற்று தகுந்த ஆதாரங்களுடன் ஆஜரானோம். ஆனால் புகார் அளித்த பாஜகவைச் சேர்ந்த சீனிவாசன் கால அவகாசம் வேண்டுமென்று கேட்டுள்ளார், தலைமைச் செயலாளரும் கால அவகாசம் கேட்டுள்ளார்.

ஆக, இவர்கள் வாய்தா வாங்குவது எதைக்காட்டுகிறது என்பதை உங்கள் முடிவுக்கே விட்டுவிடுகிறேன். எங்களுக்கு மடியில் கனமில்லை, தகுந்த ஆதாரத்தோடு வந்துள்ளோம். எங்கள்மீது குற்றச்சாட்டு வைத்தவர் என்ன குற்றச்சாட்டு உள்ளது என்பதற்கான ஆவணங்களை அளிக்க முடியவில்லை. எங்கள் எதிரில்தான் அமர்ந்திருந்தார் அவரால் எந்த ஆதாரத்தையும் அளிக்க முடியவில்லை.

நாங்கள் ஆணையரிடம் கேட்டோம், சாலையில் செல்லும் யாரும் ஏதாவது புகார் அளித்தால் விசாரிப்பீர்களா? நாங்கள் கேட்கிறோம் பிரதமர் இல்லம் பஞ்சமி நிலத்தில் உள்ளது என்று புகார் அளித்தால் விசாரிப்பீர்களா? தமிழ்நாடு முதல்வர் இருக்கும் இடம் பஞ்சமி நிலத்தில் இருக்கிறது என்று சொன்னால் விசாரிப்பீர்களா? என்று கேட்டோம். பாஜக தலைமை அலுவலகம் கமலாலயம் பஞ்சமி நிலத்தில் அமைந்துள்ளது என்று சொன்னால் விசாரிப்பீர்களா? என்றும் கேட்டோம்.

ஆகவே நான் ஆணையரிடம் சொன்னேன், உங்களுக்கு இதை விசாரிக்கும் அதிகாரமே இல்லை என்று சொன்னேன். ஒருவர்மீது புகார் அளித்தால் இந்திய சாட்சியங்கள் சட்டப்படி அவரிடம் ஆதாரம் இருக்கவேண்டும். சீனிவாசன் எங்கள்மீது புகார் அளித்தார், ஆனால் அவரால் ஆதாரத்தை சமர்ப்பிக்க இயலவில்லை, வாய்தா கேட்கிறார். அரசுக்கு சம்மன் அனுப்பினார்கள், அவர்களும் வாய்தா வாங்கியுள்ளார்கள். அரசு நினைத்தால் ஒரு மணி நேரம் போதும் அது பஞ்சமி நிலமா இல்லையா என்பதை எடுத்துவிடமுடியும்.

ஆகவே ஆதாரம் இல்லாமல் புகார் அளிக்கிறார்கள். அதனால்தான் ஆணையரிடம் உங்களுக்கு அதிகாரம் இல்லை என்று சொன்னோம். நீங்கள் வரையறுக்கப்பட்ட ஒரு அமைப்பு, அதற்கு உள்ள அதிகாரம் குறித்து உச்சநீதிமன்ற வழிகாட்டுதலை எல்லாம் கொடுத்தோம். போகிற போக்கில் சாலையில் செல்பவர்கள் சொல்லும் புகாருக்கெல்லாம் பதில் சொல்லமுடியாது. இன்றே இந்த வழக்கு முடிகிறது என்று நினைக்கிறேன்.

காரணம் அவர்களுக்கு விசாரிக்க அதிகாரம் இல்லை என்று சொல்லிவிட்டோம், புகார் அளித்தவர் ஆதாரம் இல்லாமல் வாய்தா கேட்கிறார், அரசாங்கத்திடமும் ஒன்றுமில்லை. நாங்களும் உரிய ஆவணங்கள் வைத்துள்ளோம். ஆகவே இந்த வழக்கு இத்துடன் முடிவுக்கு வருகிறது. இது மிகப்பெரிய வெற்றி. திமுக மீது யார் பழி சுமத்தினாலும் அதை சந்திக்க தயாராக உள்ளோம்.

பொய்யான குற்றச்சாட்டு ஸ்டாலின் வளர்ச்சியைப்பார்த்து பொறுக்கமுடியாத சில அரசியல்வாதிகள் கிளப்பும் ஆதரமற்ற குற்றச்சாட்டு. அவர்களுக்கு சொல்கிறோம். தெம்பிருந்தால் தைரியமிருந்தால் ஆணையத்தின்முன் வாருங்கள் என்று சவால் விடுகிறோம்.

சட்டப்படி இதுகுறித்து புகார் அளித்தவர்மீது மானநஷ்ட வழக்கு போடப்போகிறோம், அதே போன்று முதன்முதலில் இதை கிளப்பிய டாக்டர் அய்யாவுக்கு இருக்கும் ஆயிரக்கணக்கான ஏக்கர் யார் யாருக்குச் சொந்தம் என்பது மான நஷ்ட வழக்கு நீதிமன்றத்தில் இருக்கும்போது ஒவ்வொன்றாக வெளிவரும்.

இந்த வழக்கில் எப்போது அழைத்தாலும் ஆஜராக உள்ளோம் சந்திக்க உள்ளோம். இங்கல்ல டெல்லிக்கு அழைத்தாலும் சந்திக்க தயாராக இருக்கிறோம் என்று ஆணையரிடமே சொல்லிவிட்டு வந்துவிட்டோம்”.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x